தமிழகம்

கச்சநத்தம் சாதிய படுகொலை வழக்கில் பெண் உட்பட 2 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை

கச்சநத்தம் சாதிய படுகொலை வழக்கில் பெண் உட்பட 2 பேரின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கடந்த ஆண்டு மே 28-ல் நடைபெற்ற சாதி மோதலில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இப்பகுதியில் உள்ள கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் பெரும்பான்மை பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு மரியாதை அளிப்பதில் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து இச்சம்பவம் நடந்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மீனாட்சி, முத்தையா ஆகியோர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி பார்த்திபன் தள்ளுபடி செய்து இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டார்.

இருவருக்கும் உயர் நீதிமன்ற கிளை ஏற்கெனவே நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதை ரத்து செய்யக்கோரி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் ஒருவரான மகேஸ்வரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து இருவரின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.

மீண்டும் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய இருவருக்கும் உச்ச நீதிமன்றம் உரிமை வழங்கியது. அதன்படி இருவரும் தாக்கல் செய்த மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT