மதுரை
மேயருக்கு மறைமுகத் தேர்தல் நடக்க உள்ளதால் அதிமுகவில் மேயருக்கு மட்டும் போட்டியிட விருப்பமனு கொடுத்தோருக்கு இன்று ஒரு நாள் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட விருப்பமனு வாங்கப்படுகிறது. அதில், யார் யார் மனு அளிக்கிறார்கள்
என்பதன் மூலம் யாருக்கு மேயர் வேட்பாளராகும் வாய்ப்பு உள்ளது என்பது தெரிய வரும்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் திருவிழா அதற்கான தேதி அறிவிக்கும் முன்பே தொடங்கி விட்டது. அதிமுகவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளோரிடம் தலைவர் பதவிக்குத் தனியாகவும், கவுன்சிலருக்கு தனியாகவும் விருப்பமனு பெறப்பட்டது.
தற்போது கவுன்சிலர்களை மக்கள் தேர்வு செய்து அவர்கள் மூலம் மறைமுகத் தேர்தலில் மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த நடைமுறையால் அதிமுகவில் மேயர், தலைவர் பதவிக்கு மட்டும் போட்டியிட விருப்பமனு கொடுத்தோரில் பெரும்பாலானோர் கவுன்சிலருக்கு போட்டியிட விருப்பமனு கொடுக்கவில்லை.
அதனால், அதிமுகவில் மேயர், தலைவர் பதவிக்கு விருப்ப மனு வழங்கியோரிடம் இன்று கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட விருப்பமனு பெறப்படுகிறது. மதுரை மாநகராட்சி தேர்தலில் மேயருக்கு மட்டும் விருப்ப மனு கொடுத்துவிட்டு கவுன்சிலருக்கு மனு கொக்காதவர்கள் இன்று மீண்டும் கவுன்சிலருக்கு விருப்ப மனு கொடுக்க வாய்ப்புள்ளது.
இந்த விருப்பமனு பட்டியலை வைத்தே, அவர்களில் யார் கவுன்சிலர் தேர்தலில் வெற்றிபெற்றால் மேயர் வேட்பாளராகும் வாய்ப்புள்ளது என்பது தெரிந்துவிடும். மேயருக்கு நேரடி தேர்தல் நடப்பதாக இருந்தநிலையில் செவிவழிச் செய்தியாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் குடும்பத்தில் ஒருவர் மேயர் வேட்பாளராக வாய்ப்புள்ளது என்றும், ஆனால், அவர்கள் குடும்பத்தில் இருந்து யாரும் மேயர் வேட்பாளருக்கு விருப்பமனு கொடுக்கவில்லை என்றும் அவர்கள் விருப்பமனு ரகசியம் காக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், மறைமுகத் தேர்தலில் மேயர் தேர்ந்தெடுக்க உள்ளதால் இன்று அவர்களது இருவரின் குடும்பத்தில் இருந்து யாராவது கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுக்க உள்ளனரா? என்று கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அப்படி அவர்கள் குடும்பத்திலிருந்து இன்று கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட யாரும் விருப்பமனு கொடுக்காவிட்டால் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, எம்எல்ஏ விவி.ராஜன் செல்லப்பா ஆகியோரது ஆதரவாளர்களில் கவுன்சிலர் தேர்தலில் வெற்றிபெறுவோரில் ஒருவருக்கு மேயர் வேட்பாளர் அதிர்ஷ்டம் கிடைக்க வாய்ப்புள்ளது.