மூலனூர் அருகே அமராவதி ஆற்றோரத்தில் இளம்பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்ட விவகாரத்தில், அவரது நண்பரை போலீஸார் நேற்று கைது செய்தனர். கொலை செய்து, நாமக்கல்லில் இருந்து வேனில் உடலை மறைத்து எடுத்து வந்து வீசிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
திருப்பூர் மாவட்டம் மூலனூர் காவல் எல்லைக்கு உட்பட்ட மாலமேடு கவுண்டப்ப கவுண்டனூர் அருகே அமராவதி ஆற்றோரத்தில், கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில், இளம்பெண் உடல் கடந்த 18-ம் தேதி மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மூலனூர் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் நாமக்கல் மாவட்டம் ராமபுரம்புதூரை சேர்ந்த ரமேஷ் மனைவி திருமங்கை (33) என்பது தெரிந்தது. ரமேஷை திருப்பூர் அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, கோயிலுக்கு செல்வதாக கூறி வெளியில் சென்ற திருமங்கை, வீடு திரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
திருமங்கைக்கு அறிமுக மானவர்கள், நண்பர்கள் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டு விசாரித்ததில், சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவரும், ராமபுரம்புதூரில் தங்கி கிரேன் இயந்திர ஓட்டுநராக வேலை செய்பவருமான டி.தனபால் (24) மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்தபோது, திருமங்கையை தான் தங்கியுள்ள அறையில் வைத்து கொலை செய்து, மூலனூர் அருகே உடலை வீசிச் சென்றதை ஒப்புக் கொண்டுள்ளார். விசாரணைக்கு பிறகு நேற்று அவரை போலீஸார் கைது செய்தனர். உடலை கொண்டு வர பயன்படுத்தப்பட்ட தனபாலின் நண்பர் ஒருவரின் வேனையும் பறிமுதல் செய்தனர்.
சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, ‘ரமேஷுக்கும் திருமங்கைக்கும் திருமணமாகி 6 மாதங்களாகிறது. ரமேஷ் ஓட்டல் நடத்திவருகிறார். அவரது கடைக்கு சாப்பிட சென்றுவந்த வகையில் பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துள்ளனர். திருமணத்துக்கு முன்னதாகவே தனபாலுடன் திருமங்கைக்கு பழக்கம் இருந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு சில நாட்கள் தனபாலுடன் பேசாமல் இருந்தவர், பிறகு பேசத் தொடங்கியுள்ளார்.
கடந்த 17-ம் தேதி பகல் தனபாலின் அறைக்கு திருமங்கை சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தில் தனபால் திருமங்கையை கழுத்தில் காலை வைத்தும், துப்பட்டாவால் இறுக்கியும் கொலை செய்துள்ளார். சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க, திருமங்கை வாயில் சட்டைத் துணியை வைத்து அழுத்தியுள்ளார். கொலை செய்த பிறகு தனது நண்பர் ஒருவரின் காரை வாங்கி வந்து நிறுத்தியுள்ளார்.
உடலுடன் வேனில் பயணம்
நள்ளிரவு 1 மணியளவில் யாரும் இல்லாத நேரத்தில் அறையிலிருந்து உடலை வெளியில் எடுத்து, வேனில் ஏற்றி கரூர் சென்றுள்ளார். கரூர் பகுதியில் உடலை வீச லாவகமான இடம் கிடைக்கவில்லை. இதனால் திருப்பூர் மாவட்டத்தின் எல்லையான அமராவதி ஆற்றோரத்தின் பக்கவாட்டில் சாலை செல்வதைப் பார்த்து, அங்கு சென்று 18-ம் தேதி அதிகாலை நேரத்தில் உடலை வீசிச் சென்றுள்ளார்’ என்றனர்.