தமிழகம்

பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் ஏவும் பணி நவ.27-ம் தேதிக்கு தள்ளிவைப்பு: இறுதிகட்ட பணிகள் தாமதமானதால் நடவடிக்கை

செய்திப்பிரிவு

பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் ஏவுதல் திட்டம் நவம்பர் 27-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) புவி கண்காணிப்புக்காக நவீன கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நவ.25-ம் தேதி செலுத்த இஸ்ரோ முடிவு செய்திருந்தது. ஆனால், இறுதிகட்ட பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுவதால் ராக்கெட் ஏவுதல் நவ.27-ம் தேதி காலை 9.28 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

புவியில் இருந்து 509 கிமீ உயரத்தில் உள்ள சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் கார்டோசாட்-3 நிலைநிறுத்தப்பட உள்ளது. இதனுடன் 13 நானோ வகை செயற்கைக்கோள்கள் வணிகரீதியாக விண்ணில் ஏவப்படுகின்றன.

கார்டோசாட்-3 முழுவதும் புவி கண்காணிப்பு மற்றும் ராணுவ பாதுகாப்புக்கு பயன்படும். இதிலுள்ள 3டி கேமிராக்கள் உள்ளிட்ட கருவிகள் அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டவை.

இதன்மூலம் நாட்டின் எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவல், எதிரிகளின் ராணுவ நிலைகள் மற்றும் பதுங்கு குழிகளை கண்காணிக்க முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT