திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தரராஜன் ஆகியோர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தேதி அறிவித்த பிறகு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் பேசிய ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் அதிமுகவுக்கு விருப்பம் இல்லை. எப்படியாவது தேர்தலை தள்ளிக் கொண்டு போகவே பார்ப்பார்கள். அதையும் மீறி நீதிமன்ற உத்தரவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அதன்பிறகு தொகுதிப் பங்கீடு குறித்து பேசலாம் என்று கூறியதாகக் கூறப்படுகிறது.