தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் சென்னை, திருச்சி, மதுரை மண்டலங்களில் ஏரிகள் புனரமைப்பு, புதிய அணைக்கட்டுகள் அமைத்தல், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.650 கோடியை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 2017-ம் ஆண்டு முதல் வரும் 2024-ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளுக்கு பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
4,708 ஏரி, 477 அணைக்கட்டுகுறிப்பாக ரூ.2 ஆயிரத்து 962 கோடி மொத்த மதிப்பீட்டில், பொதுப்பணித் துறையின் பாசனப் பிரிவுக்கு மட்டும் ரூ.2 ஆயிரத்து 292கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் 4 கட்டங்களாக, தமிழகத்தில்உள்ள 4,708 ஏரிகளைப் புனரமைத்தல், 477 அணைக்கட்டுகளை புதிதாக கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
முதல்கட்டமாக ரூ.780 கோடியில், 1200 ஏரிகள் சீரமைக்கப்பட்டு, 30 நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2-ம் கட்டமாக, சென்னை, திருச்சி, மதுரை ஆகிய மண்டலங்களில் உள்ள 1 லட்சத்து 54 ஆயிரத்து 913 ஹெக்டேர் பாசன பரப்பு பயன்பெறும் வகையில், 57 தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ. 649 கோடியே 55 லட்சம் ஒதுக்கீடு செய்ய பொதுப்பணித் துறை பாசனப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளரின் பரிந்துரையை ஏற்ற தமிழக அரசு, ரூ.649 கோடியே 55 லட்சத்தை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.