ரஜினிகாந்த் எந்த அதிசயம் நிகழும் என்று பேசுகிறார். முதலில் அவர் கட்சி ஆரம்பிக்கட்டும். பிறகு இதுபற்றி கருத்து சொல்லலாம் என, ரஜினி கூறிய கருத்துக்கு முதல்வர் பழனிசாமி காட்டமாகப் பதில் அளித்துள்ளார்.
ரஜினி, கமல் இணையவேண்டும் என எஸ்.ஏ.சந்திரசேகர் கொளுத்திப் போட்டது, தீயாக வளர்ந்து அதிமுக அமைச்சர்கள் விமர்சிக்கும் அளவுக்கும், ரஜினியும் கமலும் அதுகுறித்து இணைவோம் என பதிலளித்தும், இருவர் பக்கம் இருக்கும் ஆதரவாளர்கள் யார் முதல்வராக நிற்பார் என்பதுவரை விவாதம் நடந்து வருகிறது.
கோவா திரைப்பட விழாவுக்கு போகும்முன் அவசியம் ஏற்பட்டால் கமலுடன் இணைவேன் எனத் தெரிவித்த ரஜினி, ஒரு விவாதத்தை உருவாக்கிவிட்டுச் சென்றார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்திருந்தார். இது திராவிட மண். இங்கு ஆன்மிக அரசியல் எடுபடாது என அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று கோவாவிலிருந்து திரும்பிய ரஜினியிடம் இதுகுறித்துக் கேட்டபோது கருத்து தெரிவித்த ரஜினி, "2021-ல் சட்டப்பேரவை தேர்தலில் தமிழக மக்கள் அற்புதத்தை, அதிசயத்தை 100-க்கு 100 சதவீதம் நிகழ்த்துவார்கள்" என்று பதிலளித்தார்.
இதுகுறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “2021-ல் தமிழ் மக்கள் அரசியலில் மிகப் பெரிய அதிசயத்தை நிகழ்த்துவார்கள் என்று எதை வைத்து ரஜினி சொல்கிறார்? 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம்.
எந்த அடிப்படையில் 2021-ம் ஆண்டில் அதிசயம் நிகழும் என ரஜினி கூறுகிறார் என்று தெரியவில்லை. ரஜினி கட்சி தொடங்கிய பிறகே அவரைப் பற்றியும், அவரது கருத்தைப் பற்றியும் விரிவாகக் கூற முடியும். 2021-ம் ஆண்டில் அதிமுவைச் சேர்ந்த ஒருவரே முதல்வர் வேட்பாளராக இருப்பார்” என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
2021-ல் முதல்வர் வேட்பாளராக உங்களை நிறுத்தும் எண்ணம் இருக்கிறதா என செய்தியாளர்கள் கேட்க, ''தேர்தலையே அறிவிக்கவில்லை. அதற்குள் கற்பனையான கேள்வியெல்லாம் கேட்டால் என்ன பதில் சொல்வது?'' என்றார்.