டி.ஆர்.பாலு: கோப்புப்படம் 
தமிழகம்

மருத்துவப் படிப்பு: பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இட ஒதுக்கீட்டை மத்திய தொகுப்பிலிருந்து வழங்கிடுக; டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மருத்துவப் படிப்பில், பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய தொகுப்பிலிருந்து வழங்கிட வேண்டும் என, மக்களவை திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று மக்களவையில் பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். தேசிய அளவில் மருத்துவப் படிப்புக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் கோரிக்கையை மக்களவை திமுக உறுப்பினர் இன்று (நவ.21) மக்களவையில் வலியுறுத்திப் பேசினார். அப்போது அவர் பேசும்போது, "தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான, இட ஒதுக்கீடு 50 சதவீதம் வரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கான பொதுத் தொகுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு கூட அரசியல் சட்டப்பிரிவுகளின்படி வழங்கப்படவில்லை.

மத்திய அரசு அடுத்த கல்வியாண்டிலாவது (2019-2020) அரசியல் சட்டத்தின் மாண்புகளைக் காப்பாற்றும் வகையில் மருத்துவக் கல்லூரிகளில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய தொகுப்பிலிருந்து வழங்கிட வேண்டும்," என டி.ஆர்.பாலு கேட்டுக்கொண்டார்.

SCROLL FOR NEXT