கமலும் ரஜினியும் அரசியலில் படம் நடிப்பதற்காக இணையலாம் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த பிறகு, வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"இடைத்தேர்தலுக்குப் பிறகு ஸ்டாலினைச் சந்திக்க நினைத்தேன். அதற்காக இப்போது அவரைச் சந்தித்தேன்.
தேர்தலில் நேரடியாக நின்று மக்களைச் சந்தித்தால் தோற்று விடுவோம் என்ற காரணத்தினால், மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என அதிமுக அரசு அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. இது அதிமுகவின் தோல்வி பயத்தைக் காட்டுகிறது.
இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்களைக் கொன்று குவித்த மகிந்த ராஜபக்ச பிரதமராகவும், கோத்தபய ராஜபக்ச அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, அங்குள்ள தமிழர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பேராபத்தை ஏற்படுத்தும். ஐநாவால் போர்க்குற்றவாளி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கோத்தபய ராஜபக்சவை இந்தியாவுக்கு அழைப்பதும், இந்தியப் பிரதமர் அவருக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதும் கண்டனத்திற்குரியது.
கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் போராடி வரும் திருமாவளவனை காயத்ரி ரகுராம் போன்றவர்கள் நாகரிகமற்ற முறையில் பேசி வருவது கண்டனத்திற்குரியது. தமிழகத்தின் பாரம்பரியமிக்க தலைவர்கள், நடிகைகளுக்கெல்லாம் அறிக்கை விட்டு அவர்களைப் பெரிதாக்க விரும்பவில்லை.
முரசொலி நில விவகாரத்தில், புகார் அளித்தோர் தரப்பு எந்த ஆவணத்தையும் தாக்கல் செய்யவில்லை. உண்மைக்குப் புறம்பான கருத்துகளைக் கூறி, தமிழக வாழ்வாதாரப் பிரச்சினைகளை மழுங்கடிக்கும் போக்கு இது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பையனூர் பங்களா யாருடையது என்பதை நாடறியும். அது பஞ்சமி நிலம்தான் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
கமலும் ரஜினியும் இணைந்து படம் நடித்து வெகுகாலமாகி விட்டது. அரசியலில் இருவரும் படம் நடிப்பதற்காக இணையலாம். தமிழகத்தில் எந்த வெற்றிடமும் இல்லை.
உள்ளாட்சித் தேர்தல் உண்மையாக நடைபெற்றால் திமுகவுடன் இணைந்து சந்திப்போம்".
இவ்வாறு வேல்முருகன் தெரிவித்தார்.