தென்காசி மாவட்டம் தொடக்க விழா அழைப்பிதழை சென்னையில் முதல்வர் பழனிசாமியிடம் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், வி.எம்.ராஜலெட்சுமி, சட்டப் பேரவை உறுப்பினர் மனோகரன் ஆகியோர் வழங்கினர். 
தமிழகம்

முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்: தென்காசி மாவட்டம் நாளை உதயமாகிறது - 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி

செய்திப்பிரிவு

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். விழாவில், 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் தென்காசி, கள்ளக் குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத் தூர், ராணிப்பேட்டை ஆகிய நகரங்களை தலைமையிடமாகக் கொண்டு, புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய மாவட்டங்களுக்கான தொடக்க விழாவுக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

விழா ஏற்பாடுகள் தீவிரம்

முதலாவதாக, தென்காசி மாவட்ட தொடக்க விழா தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் நாளை (22-ம் தேதி) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. தென்காசி மாவட்டத்தை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். விழாவில், 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார்.

தலைமைச் செயலாளர் க.சண் முகம் வரவேற்கிறார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா திட்ட விளக்க உரையாற்றுகிறார். மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி முன்னிலை வகிக்கின்றனர். தென் காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் நன்றி கூறுகிறார்.

விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழா தொடர்பான அழைப்பிதழை சென்னையில் முதல்வர் பழனி சாமியிடம், அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், வி.எம்.ராஜலெட்சுமி, சட்டப்பேரவை உறுப்பினர் மனோ கரன் உள்ளிட்டோர் வழங்கினர்.

விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு இன்று மாலை முதல்வர் பழனிசாமி வருகிறார். இரவில் தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கும் அவர், நாளை காலை அங்கிருந்து விழா நடைபெறும் தென்காசிக்கு வருகிறார்.

SCROLL FOR NEXT