அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாஸை முதல்வர் பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள ராமதாஸ், நேற்று முன்தினம் இரவு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை செய்த டாக்டர்கள் குழுவினர், தேவையான சிகிச்சையை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று பகல் 1 மணி அளவில் மருத்துவமனைக்கு வந்த முதல்வர் பழனிசாமி, ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார். ராமதாஸுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அப்போது சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் உடன் இருந்தனர். ராமதாஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் வீட்டுக்கு செல்லலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மயிலாடுதுறை முன்னாள் எம்.பி., பாரதிமோகனையும் முதல்வர் சந்தித்து நலம் விசாரித்தார்.