ஊழலற்ற நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றவர்கள் மேயர்களாக, நகர்மன்ற, பேரூராட்சி மன்றத் தலைவர்களாக தேர்வு செய்யப்படுவதுதான் சாலச் சிறந்தது ஆகும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“மூன்று ஆண்டுகால தாமதத்திற்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு முன்வந்துள்ள அதிமுக அரசு, உள்ளாட்சிகளில் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அரசாணை வெளியிட்டு இருக்கிறது.
உள்ளாட்சிகளில் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறையை மாற்றி மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்களால் தேர்வு செய்யும் முறை என்பது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையைப் பறித்துள்ள அதிமுக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது.
உள்ளாட்சிகளில் நல்லாட்சி நடைபெற வேண்டுமானால் ஊழலற்ற நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றவர்கள் மேயர்களாக, நகர்மன்ற, பேரூராட்சி மன்றத் தலைவர்களாகத் தேர்வு செய்யப்படுவதுதான் சாலச் சிறந்தது ஆகும்”.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.