தனது முந்தைய முதலாளி குடும்பத்தைப் பார்க்க வந்த முன்னாள் சமையல்காரர், அவர்களுக்கு பாஸ்தா வகை உணவைத் தயார் செய்து அதில் மயக்க மருந்தை கலந்துகொடுத்து நகைகளுடன் மாயமானார். அவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கம், ஹால்ஸ் சாலையில் வசிப்பவர் சீனிவாசுலு (54). இவருக்கு நந்தினி என்கிற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இவர் யானைக்கவுனியில் எண்ணெய்த் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவர் குடும்பத்துடன் ஹால்ஸ் சாலையில் தனி வீட்டில் வசித்து வருகிறார். கிருஷ்ணா என்கிற வாட்ச்மேன், சமையல்காரர், சக்திவேல் என்கிற கார் ஓட்டுநர் ஆகியோர் சீனிவாசுலுவின் வீட்டில் பணியாற்றி வருகின்றனர்.
இவரிடம் நேபாள், பாகி பரசூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுஜன் (24) என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் வாட்ச்மேன் மற்றும் சமையல் வேலை செய்து வந்துள்ளார். சீனிவாசுலு குடும்பத்துடன் நெருங்கிப் பழகியுள்ளார். பின்னர் வேலையை விட்டுவிட்டு சொந்த நாடான நேபாளுக்குச் சென்றுவிட்டார்.
அவரைப் பிரிய சீனிவாசுலு குடும்பத்தாருக்கு மனமில்லை. வேறு வழியில்லாமல் சுஜனை அவரது தாய்நாட்டுக்கு அனுப்பியுள்ளனர். பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் சுஜன் நேபாளத்திலிருந்து வேலை தேடி மீண்டும் சென்னைக்கு வந்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பர்னிச்சர் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 18-ம் தேதி மாலை 7.30 மணி அளவில் சுஜன் கீழ்ப்பாக்கத்தில் உள்ள சீனிவாசுலு வீட்டுக்குச் சென்றுள்ளார். வெகுநாள் கழித்து சுஜன் வந்ததைப் பார்த்து சீனிவாசுலு குடும்பத்தார் சந்தோஷத்துடன் அவரிடம் பேசியுள்ளனர்.
இதையடுத்து அவர்களுக்காக பாஸ்தா எனப்படும் இத்தாலிய நூடுல்ஸ் வகை துரித உணவை ஃபாஸ்ட்டாக செய்து சுஜன் அனைவருக்கும் பரிமாறியுள்ளார். சீனிவாசுலு, அவர் மனைவி நந்தினி, மகள், அங்கு வேலை செய்யும் நேபாள் காவலாளி கிருஷ்ணா, ஓட்டுநர் சக்திவேல் உள்ளிட்டோரும் பாஸ்தா உணவைச் சாப்பிட்டுள்ளனர்.
சாப்பிட்ட உணவில் சுஜன் மயக்க மருந்தைக் கலந்ததால் சிறிது நேரத்தில் அனைவரும் மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக சுஜன் வீட்டிலிருந்த 15 சவரன் நகை மற்றும் ரொக்கப் பணம் ரூ.35,000-த்தை திருடிக்கொண்டு தப்பித்துச் சென்றுள்ளார்.
மயக்கத்திலிருந்த அனைவரும் காலையில் மயக்கம் தெளிந்து எழுந்துள்ளனர். அப்போதுதான் அவர்களுக்கு சுஜன் உணவில் ஏதோ மயக்கப்பொடியை கலந்து கொடுத்துவிட்டுச் சென்றது தெரியவந்துள்ளது. வீட்டில் உள்ள பொருட்களைச் சோதனை செய்தபோது நகை மற்றும் பணம் திருட்டுப் போயிருப்பது தெரியவந்துள்ளது.
வீட்டு உரிமையாளர் சீனிவாசுலு மதியம் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் நடந்ததைக் கூறி புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்ற போலீஸார் வீட்டில் வேலை செய்யும் மற்றொரு நேபாள் காவலாளி கிருஷ்ணாவைப் பிடித்து விசாரித்துள்ளனர். பின்னர் கிருஷ்ணா மூலம் சுஜனின் செல்போனுக்குத் தொடர்புகொண்டு பேசச் சொல்லியுள்ளனர்.
கிருஷ்ணா போலீஸ் சொன்னபடி பேச, போனை எடுத்த சுஜன் எதுவுமே நடக்காததுபோல் பேசியுள்ளார். இரவு நேபாள் செல்ல உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து திட்டம் போட்ட போலீஸார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கிருஷ்ணாவுடன் மறைந்திருந்துள்ளனர். இரவு 11 மணி அளவில் சுஜன் சென்ட்ரல் ரயில் நிலையம் வரும்போது வாட்ச்மேன் கிருஷ்ணா அவரை அடையாளம் காட்டியுள்ளார்.
உடனடியாக போலீஸார் சுஜனை மடக்கிப் பிடித்தனர். பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ''கையில் பணம் இல்லை, ஊருக்குச் செல்லலாம் என முடிவெடுத்தேன். அப்போதுதான் முன்னாள் முதலாளி சீனிவாசுலு ஞாபகத்துக்கு வந்தார். அவர் வீட்டுக்குச் சென்றேன். நல்லபடியாகப் பேசினார். நானே ஃபாஸ்ட் புட் உணவைத் தயாரித்து க்கொடுப்பதாகச் சொன்னேன்.
சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டனர். ஏற்கெனவே என்னிடம் இருந்த மயக்கம் வரவைக்கும் பொடியைத் தூவி பாஸ்தா வகை உண்வைத் தயாரித்துக் கொடுத்தேன். மயங்கியதும் அவர்களிடம் இருந்த நகைகளை மட்டும் திருடிச் சென்றேன்'' என்றார்.
சுஜனிடமிருந்து திருடப்பட்ட நகை மற்றும் திருடிய பணம் 33 ஆயிரத்தில் ரூ.20 ஆயிரத்தை போலீஸார் மீட்டனர். கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.