தமிழகம்

மாநகராட்சி கவுன்சிலர் ‘சீட்’பெற அமைச்சர்களை வட்டமிடும் நிர்வாகிகள்: அதிமுகவில் வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக நடக்குமா?

செய்திப்பிரிவு

மதுரை மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலர் ‘சீட்’ பெற அதிமுக நிர்வாகிகள் இப்போதிருந்தே அமைச்சர்கள், கட்சி மேலிட நிர்வாகிகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் அணுகி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதனால், முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை முன்கூட்டியே தொடங்கிவிட்டன.

கட்சியில் பெரிய பதவிகளை அடைவதற்கும், செல்வாக்குப் பெறுவதற்கும் கவுன்சிலர் பதவி ஒரு துருப்புச்சீட்டாக கருதப்படுகிறது. அதுவே, ஆளும்கட்சியில் கவுன்சிலராக இருந்தால் ஆட்சியிலும், கட்சியிலும் இரட்டை அதிகாரம் செலுத்தலாம்.

தேர்தலில் ஆளும்கட்சி சார்பில் தேர்தல் செலவுக்கும் பணம் கிடைக்கும். கையில் இருந்து பெரியளவில் செலவு செய்ய வேண்டி வராது. அதனால், தற்போது ஆளும்கட்சியாக உள்ள அதிமுகவில் மதுரை மாநகராட்சியில் ‘சீட்’ பெற அக்கட்சியினரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் போட்டியிட மொத்தம் 550 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். மாநகர அதிமுகவில் 72 வார்டுகள் உள்ளன. இதில் 400 பேரும், புறநகர் கிழக்கு அதிமுகவில் உள்ள 28 வார்டுகளில் 150 பேரும் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர்.

விருப்பமனு அளித்தோரில் ஒவ்வொரு வார்டுக்கும் தகுதியுள்ள 2 பேரின் பட்டியலைத் தயார் செய்து மாவட்டச் செயலாளர்கள், கட்சித் தலைமைக்கு அனுப்பு வார்கள். அதில் ஒருவரை மாவட்டச் செயலாளர் ஒப்புதல் அடிப்படையில் கட்சித் தலைமை அறிவிக்கும். அதனால், கவுன்சிலர் ‘சீட்’ பெற மதுரை அதிமுகவில் கட்சி நிர்வாகிகள் மாநகர செயலாளரும், அமைச்சருமான செல்லூர் கே.ராஜூவையும், புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ-வையும் அணுகி வருகின்றனர்.

அமைச்சர், மாவட்டச் செயலாளர் ஏமாற்றினால் என்ன செய்வது என்று பலரும் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை அணுகி வருகின்றனர். ஆனாலும், உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பை கட்சித் தலைமை முழுக்க முழுக்க மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உள்ளூர் அமைச்சர்களிடம் ஒப்படைத்துவிடும். அதனால், அவர்கள் பரிந்துரையில்தான் கவுன்சிலர் ‘சீட்’ கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

கட்சியில் சீனியர், கட்சிக்காக உழைத்தோர் மற்றும் அப்பகுதி மக்களிடம் செல்வாக்குப் பெற்றவர்களுக்கு கடந்த காலத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டது. ஆனால், தேர்தல் செலவு செய்யக்கூடிய அளவுக்கு வசதிப்படைத்தோருக்கு மட்டுமே கவுன்சிலர் ‘சீட்’ வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதனால், வேட்பாளர் தேர்வு வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடக்குமா? என்ற கலக்கம் அதிமுகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி வேட்பாளர் தேர்வில் அதிமுகவுக்கு பெரும் தலைவலி உருவாகும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஒரு சில நாட்களிலே அதிமுக சார்பில் 100 வார்டுகளில் போட்டியிடக்கூடியவர்கள் பட்டியல் வெளியாகக்கூடும் எனக் கூறப்படுகிறது. ஆனால், ஆளும்கட்சியில் ஒரு தரப்பினர், உள்ளாட்சித் தேர்தல் நடத்த வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளதாகக் கூறுகின்றனர்.

- ஒய்.ஆண்டனி செல்வராஜ்

SCROLL FOR NEXT