நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரெஞ்சு கலாச்சாரத்தின் ஜன்னலாக புதுச்சேரி விளங்குவதாலும், இங்குள்ள பாரம்பரிய கட்டிடங்கள், சுற்றுலா இடங்களை காணவும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக வெளிநாட்டவர் புதுச்சேரிக்கு வருகின்றனர்.
2017-ம் ஆண்டில் 15,31,972 உள்நாட்டு மற்றும் 1,31,407 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2018-ல் 16,16,660 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளாகவும், 1,41,133 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாகவும் உயர்ந்தது. நடப்பாண்டு அக்டோபர் வரை 14,54,994 உள்நாட்டு மற்றும் 1,39,359 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இங்குள்ள தங்குமிடங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.
சில ஓட்டல்கள் இதைப் பயன்படுத்தி வாடகையை உயர்த்தி வசூலிக்கின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் அருகிலுள்ள தமிழகப் பகுதிகளுக்கு சென்று தங்குகின்றனர். இதனால் புதுச்சேரியில் வியாபாரம் பாதிக்கப் படுவதுடன், அரசுக்கும் வரி இழப்பு ஏற்படுகிறது. மேலும் புதுச்சேரியில் எந்த அனுமதி யும் இல்லாமல் நடத்தப்படும் அங்கீகாரம் இல்லாத வீடுகள் பலவற்றில் சுற்றுலாப் பயணிகள் தங்குகின்றனர். இதனால் அரசுக்கு பல வகைகளில் வரி இழப்பு ஏற்படுகிறது.
எனவே புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும், வீடுகளில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புடன் தங்குவதை உறுதி செய்யவும், அதுபோன்ற வீடுகளை முறைப்படுத்துவதற்காகவும் 'பெட் அண்டு பிரேக் பாஸ்ட்' மற்றும் 'வீடுகளில் சுற்றுலாப் பயணிகள் தங்கும் திட்டம்' அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இத்திட்டத்தின் ஒப்புதல் மற்றும் பதிவு செய்வதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு சுற்றுலாத் துறை கொண்டு வந்துள்ளது. வெளிநாட்டினருக்கும், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் ஒரு சுத்தமான மற்றும் மலிவு இடத்தை வழங்குவதே அடிப்படை யோசனையாகும்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இந்திய பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை அனுபவிப்பதற்கும், இந்திய உணவு வகைகளை அனுபவிப்பதற்கும், ஒரு இந்திய குடும்பத்துடன் தங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இதற்காக, சுற்றுலாத் துறை இயக்குநர் தலைமையில் சம்பந்தப்பட்ட பகுதியின் எஸ்.பி, நகராட்சி ஆணையர், பொதுப்பணி துறை உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் புதுச்சேரி ஹோட்டல் சங்கத்தின் செயலாளர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது.
சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு 37 அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அவற்றில் குறிப்பாக தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்; சுற்றுலா பயணிகளின் நேரம், அவர்களுடைய முகவரி உள்ளிட்டவைகளையும் வெளிநாட்டவரிடம் பாஸ்போர்ட் விவரங்களையும் சேகரித்து வைத்திருக்க வேண்டும்; புகை அல்லது தீப்பிடிப்பதை கண்டறியும் சாதனம், குப்பை வெளியேற்றத்துக்கு நகராட்சி விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வசதிகளின் அடிப்படையில் சில்வர், கோல்டு என தர அந்தஸ்து வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப் பங்கள் 30 நாட்களுக்குள் ஒற்றை சாளர அமைப்பு மூலம் ஆராய்ந்து அளிக்கப்படும். இந்த புதிய திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாக சுற்றுலாத் துறை இயக்குநர் முகமது மன்சூர் தெரிவித்துள்ளார்.
- அ. முன்னடியான்