தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரிகள், குளங்கள் நிரம்பி வருவதை தொடர்ந்து பிசான நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. மாவட்டத்தில் இந்த ஆண்டு 45,700 ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், மானாவாரி பகுதிகளில் இதுவரை 2.12 லட்சம் ஏக்கர் பரப்பில் சிறுதானியங்கள் மற்றும் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நடப்பாண்டு மழை நன்றாக பெய்ததால் நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. கடந்த அக்டோபர் 16-ம் தேதி முதல் தொடர்ந்து பெய்து வரும் மழை மானாவாரி பயிர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்து வருகிறது. இதனால் மானாவாரி சாகுபடி இந்த ஆண்டு அமோகமாக உள்ளது.
மாவட்டத்தில் வழக்கமாக சிறுதானியங்கள் 1.40 லட்சம் ஏக்கரில் பயிரிடப்படும். இந்த ஆண்டு 1.33 லட்சம் ஏக்கரில் சிறுதானியங்கள் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 1.07 லட்சம் ஏக்கர் அளவுக்கு சாகுபடி நடைபெற்றுள்ளது. மக்காச்சோளம் மட்டும் 81,800 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சோளம் 14,866 ஏக்கரிலும், கம்பு 11 ஆயிரம் ஏக்கரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஏற்பட்ட படைப்புழு தாக்குதல் காரணமாக இந்த ஆண்டு மக்காச்சோளம் சாகுபடி பரப்பு 20 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இருப்பினும் வரும் நாட்களில் இது சரியாகிவிடும் என வேளாண்மை துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்த ஆண்டு முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மக்காச் சோளத்தில் படைப்புழுத் தாக்குதல் குறைந்துள்ளது.
ஓட்டப்பிடாரம் பகுதியில் மானாவாரி சாகுபடியில் பயிரிடப்பட்டுள்ள பாசிப் பயறு செடிகளுக்கு மீது மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்ட விவசாயி. படங்கள்: என்.ராஜேஷ்
வேளாண்மை துறை சார்பில் மானிய உதவியில் ஒட்டுமொத்த பரப்பில் பூச்சி மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 75,614 ஏக்கரில் மருந்து தெளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயறு வகைகள்
பயறு வகைகளை பொருத்த வரை மாவட்டத்தில் வழக்கமான சாகுபடி பரப்பு 1.91 லட்சம் ஏக்கராகும். இந்த ஆண்டு 2.38 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை 1.05 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி செய்யப் பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக உளுந்து 61,233 ஏக்கரிலும், பாசிப் பயறு 43,935 ஏக்கரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இலக்கை எட்டமுடியாவிட்டாலும் வழக்கமான சாகுபடி பரப்பை எட்டிவிட முடியும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
பருத்தி சாகுபடி
மாவட்டத்தில் வழக்கமாக 11,110 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு 22,487 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் இதுவரை 7,660 ஏக்கரில் சாகுபடி நடைபெற்றுள்ளது.
பிசான நெல்
பிசான நெல் சாகுபடிக்கான பணிகள் தற்போது தான் வேகமாக நடைபெறுகிறது. பெரும்பாலான இடங்களில் நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளன. ஓரிரு இடங்களில் மட்டுமே நெல் நடவு பணிகள் நடைபெறுகின்றன. மாவட்டத்தில் இதுவரை 500 ஏக்கர் அளவுக்கு நெல் நடவு பணி முடிந்துள்ளது. நாற்றங்கால் மட்டும் இதுவரை 250 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வழக்கமான நெல் சாகுபடி பரப்பு 31,926 ஏக்கர். இந்த ஆண்டு 45,714 ஏக்கரில் நெல் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெல் நடவு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இம்மாத இறுதிக்குள் பெரும்பாலான இடங்களில் நடவுப் பணி முடிந்துவிடும் என வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.