உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாநகராட்சி மேயர் பதவியைப் பிடிக்க அதிமுகவில் ப.குமார், திமுகவில் மு.அன்பழகன் உள்ளிட்ட பிரபலங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட தங்களுக்கு சாதகமான வார்டை தேர்வு செய்யும் பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி மாநகராட்சி மேயர் பதவி ஆண், பெண் என எந்தப் பிரிவுக்கு ஒதுக்கப்பட உள்ளது என இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், இப்பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார், ஆவின் சேர்மன் சி.கார்த்திகேயன், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன் ஜவகர்லால் நேரு உட்பட 22 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். திமுக சார்பில் போட்டியிட முன்னாள் துணை மேயரும், திமுக மாநகரச் செயலாளருமான மு.அன்பழகன், திருவெறும்பூர் முன்னாள் ஒன்றியச் செயலாளர் நவல்பட்டு விஜி, இன்ஜினியர் அசோகன் ஆகியோர் விருப்ப மனு அளித்துள்ளனர். திமுக சார்பில் மனு அளிக்க 27-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.
மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படும் முறைக்கு மாற்றாக, கவுன்சிலர்கள் மூலம் மேயரைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டால், அதற்கேற்ப தாங்களும் கவுன்சிலராக போட்டியிட கட்சிகளின் பிரபலங்கள் தற்போதே தயாராகி வருகின்றனர். இதன்படி ப.குமார், மு.அன்பழகன் உள்ளிட்டோர், தங்களுக்கு சாதகமானதாக கருதப்படும் வார்டுகளுக்குச் சென்று, அங்குள்ள நிலவரம் குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து ஆலோ சித்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிமுக வட்டாரத் தினரிடம் விசாரித் தபோது, “அரசியல் அழுத்தங்கள் காரணமாக, திருச்சி மேயர் பதவி இம்முறை ஆண் பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட அதிக வாய்ப்புள்ளன. ஆண்களுக்கு ஒதுக்கப்படும்பட்சத்தில், அதிமுகவில் ப.குமார் போட்டியி டுவதை கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் மறைமுகமாக உறுதி செய்துள்ளனர்.
எனவே, அதற்கேற்ப ப.குமார் தனக்கு சாதகமான வார்டுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். முதற்கட்டமாக திருவெறும்பூர் பகுதியிலுள்ள 39(பாலாஜி நகர், கைலாஷ் நகர், விண்ணகர்), 40(பிரகாஷ் நகர், முத்து நகர், எஸ்ஏஎஸ் நகர்) (பழைய வார்டு 64, 65) ஆகிய வார்டுகள் அல்லது உறையூர் பகுதியிலுள்ள வார்டு எண் 23(பாளையம் பஜார், குறத்தெரு, தேவர் காலனி) ஆகியவற்றை தேர்ந்தெடுத்துள்ளார். இதில் ஏதேனும் ஒன்றில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றனர்.
திமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, “திமுகவை பொறுத்தமட்டில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான மாநகரச் செயலாளர் மு.அன்பழகன் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்பு அதிகம். தனக்கு சாதகமான வார்டு குறித்து ஆய்வு செய்த மு.அன்பழகன், இறுதியில் 48-வது வார்டைத் தேர்வு செய்துள்ளார். சுப்பிரமணியபுரத்திலுள்ள ஜெய்லானியா தெரு, ராஜா தெரு, ரகுமானியாபுரம், பொன்மலை ரயில்வே குடியிருப்பின் சில பகுதிகள் இந்த வார்டில் வருகின்றன” என்றனர்.
பெண்களுக்கு ஒதுக்கீடு செய்தால்...
திருச்சி மாநகராட்சி மேயர் பதவி ஏற்கெனவே பெண்(பொது) பிரிவில் உள்ளது. இம்முறையும் இந்த ஒதுக்கீட்டு முறையே தொடரும்பட்சத்தில் அதிமுக சார்பில் மேயர் வேட்பாளராக போட்டியிட அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஜாக்குலின், மாநகர் மாவட்ட மகளிரணிச் செயலாளர் தமிழரசி, முன்னாள் மேயர் ஜெயா உள்ளிட்ட பெண்கள் விருப்ப மனு அளித்துள்ளனர்.
ப.குமாரின் மனைவியும் விருப்பமனு அளித்துள்ளார். திமுகவை பொறுத்தமட்டில் ஏற்கெனவே மேயர் பதவிக்கு போட்டியிட்டிருந்த மாநகர துணைச் செயலாளர் விஜயா ஜெயராஜ் மட்டுமே விருப்ப மனு அளித்துள்ளார். வரும் 27-ம் தேதி வரை காலக்கெடு இருப்பதால், அதற்குள் முன்னாள் கோட்டத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், கருணாநிதிக்கு இரங்கல்பா வாசித்ததால் சர்ச்சையில் சிக்கி விருப்ப ஓய்வில் சென்ற பெண் காவலர் செல்வராணி உள்ளிட்டோர் விருப்ப மனு அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.