காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது மகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்ற தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த இளைஞர் 3 மாதங்களுக்கு முன் இளம்பெண்ணை காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து இளம்பெண்ணின் தாய் அளித்த புகாரின்பேரில், திருநள்ளாறு போலீஸார் இளம் பெண்ணை மீட்டு, பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், அந்த இளம் பெண்ணும் இளைஞரும் நேற்று முன்தினம் வயல்வெளியில் சந்தித்து பேசியுள்ளனர். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து இளம்பெண்ணின் தாயாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, நேற்று வீட்டிலி ருந்த இளம்பெண்ணை அவரது தாயார் கண்டித்துள்ளார். அப் போது இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்ததால் இளம்பெண் மீது மண்ணெண் ணெய் ஊற்றி தீவைத்த அவரது தாயார் தன் மீதும் மண் ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீவைத்துக் கொண்டார். இதில் இருவர் உடலும் பற்றி எரிந்ததில் இருவரும் அலறித் துடித்துள்ளனர்.
உடனடியாக அக்கம்பக்கத் தினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டு, நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திட்டச்சேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்ற மகளுக்கு தாய் தீ வைத்ததுடன், தானும் தற்கொலை செய்ய முயன்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.