முதல்வர் நாராயணசாமி: கோப்புப்படம் 
தமிழகம்

ஆணையர் நியமித்து நான்கு மாதங்களானது - புதுச்சேரியில் எப்போது உள்ளாட்சி தேர்தல்?

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் அவசர அவசரமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் ஆணையர் நியமிக்கப்பட்டு நான்கு மாதங்களாகியும் அதைத்தொடர்ந்து பணிகள் ஏதும் நடைபெறவில்லை. தமிழகத்தில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ள நிலையில் புதுச்சேரியில் எப்போது உள்ளாட்சித் தேர்தல் என்ற கேள்வி அனைத்து மட்டத்திலும் எழுந்துள்ளது.

புதுச்சேரியில் இதுவரை இரு முறை மட்டுமே உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 2006-ல் கடைசியாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதையடுத்து கடந்த 2011 முதல் தற்போது வரை நடத்தப்படாமல் உள்ளது.

உச்ச நீதிமன்றம் கடந்த 8.5.2018 இல் புதுச்சேரியில் வார்டுகளை 4 வார காலத்துக்குள் சீரமைத்து, 8 வார காலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் வார்டுகள் மறுசீரமைத்து அரசாணையை புதுச்சேரி அரசு வெளியிட்டது. அதன்படி உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீதம், ஓபிசி- 33.5 சதவீதம், எஸ்சி இடஒதுக்கீடு உள்ளாட்சி மக்கள் விகித அடிப்படையில் நியமிக்கப்படும். எஸ்டி - 0.5 சதவீதம்.
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் புதுச்சேரியில் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்தது.

குறிப்பாக ஆளுநர் கிரண்பேடியும் அதிகளவில் ஆர்வம் காட்டினார். உள்ளாட்சி தேர்தல் மூலம் 1,147 பிரதிநிதிகள் மக்கள் சேவைக்காக தேர்வு செய்யப்படுவதுடன் கூடுதல் நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும். அத்துடன் மக்களின் பல அடிப்படை தேவைகள் பூர்த்தியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ஆளுநர் கிரண்பேடி தரப்பில் கடந்த ஜூலையில் உள்ளாட்சி தேர்தல் ஆணையை நியமிக்க தனி உத்தரவை பிறப்பித்தால் அதை ரத்து செய்து சட்டப்பேரவையை கூட்டி புதுச்சேரி மாநில உள்ளாட்சி தேர்தல் நடத்தும் ஆணையராக பாலகிருஷ்ணனை முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் ஆணையரை அறிவித்து நான்கு மாதங்களாகியும் அதைத்தொடர்ந்து அடுத்த கட்ட பணிகள் ஏதும் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இச்சூழலில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளது. விருப்ப மனுக்கள் பெறும் பணிகளும் தொடங்கியுள்ளன. ஆனால் புதுச்சேரியில் இதற்கான அடிப்படை பணிகளே இல்லை.

இதுதொடர்பாக உள்ளாட்சி துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, "உள்ளாட்சி தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகின்றது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்," என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT