காங்கிரஸ் கட்சியின் தலைவரையும் ஜாலியன் வாலாபாக் அறக்கட்டளையின் உறுப்பினராகச் சேர்ப்பதுதான் நீதி என, மாநிலங்களவையில் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, வைகோ, நேற்று (நவ.19) மாநிலங்களவையில், ஜாலியன் வாலாபாக் அறக்கட்டளை மீது பேசியதாவது:
"நவம்பர் 19. ஜாலியன் வாலாபாக் என்ற பெயரை உச்சரித்தாலே, புரட்சிகரமான எண்ணம் கொண்டவர்கள், போராளிகளின் நாடி நரம்புகளில் மின்சாரம் பாய்கின்றது. நினைத்தாலே நெஞ்சை நடுங்க வைக்கும் ஜாலியன் வாலாபாக் படுகொலை, பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் நகரில் நடைபெற்றது. அந்த நாள், சீக்கிய மக்கள் கொண்டாடுகின்ற பைசாகி திருநாள் ஆகும்.
ஏறத்தாழ ஆறரை ஏக்கர் பரப்புள்ள ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், பல்லாயிரக் கணக்கhன மக்கள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், கைக்குழந்தைகளுடன் தாய்மார்கள் கூடி இருந்தனர். அவர்கள் திருவிழா கொண்டாடுவதற்காகக் கூடவில்லை. சத்யபால், சைபுதீன் கிச்லு என இரண்டு தலைவர்களை, ரௌலட் சட்டத்தின்படி நாடு கடத்துவதை எதிர்த்து, அமைதியான முறையில் எதிர்ப்பைப் பதிவு செய்யக் கூடி இருந்தனர்.
இந்த வேளையில்தான், பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்டு டயர் என்பவர், ராணுவத் துருப்புகளோடு உள்ளே நுழைந்தார். அங்கே பெரிய வாயில் ஒன்றுதான் இருந்தது. மேலும் 6 சிறிய நுழைவாயில்கள் இருந்தன. அனைத்தையும் அடைத்து விட்டார். கூடி இருந்த மக்களுக்கு எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல், யாரையும் விட்டுவிடாமல் எல்லோரையும் கொல்வதற்கு உத்தரவிட்டார்.
ரத்தம் ஆறாக ஓடியது. மதில் சுவர்களில் ஏறித் தப்பலாம் என நினைத்தவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிர் தப்ப முயன்று, அங்கிருந்த ஒரு கிணறுக்குள் குதித்த 120 பேர் இறந்தனர். மொத்தம் 379 பேர் கொல்லப்பட்டதாக அரசு சொன்னது, உண்மையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக காங்கிரஸ் கட்சி கூறியது.
இந்தக் கொடுஞ்செயலை எதிர்த்து, ரவீந்திரநாத், பிரிட்டன் பேரரசு வழங்கிய விருதை, வேண்டாம் எனத் தூக்கி எறிந்தார். இதன்பிறகு, ஒரு சிறுவன் அந்த இடத்திற்குச் சென்றார். ரத்தம் தோய்ந்த மண்ணை ஒரு குடுவையில் எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு வந்தார். தன் தங்கையிடம் கொடுத்து, இது நாம் வணங்க வேண்டிய தியாகச் சின்னம் என்று சொன்னார். அப்படிச் சொன்னவர், வேறு யாரும் அல்ல. பகத்சிங்.
அதேபோல, உத்தம்சிங் என்ற மாவீரர் உதயமானார். 21 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே 13 ஆம் தேதி, ஆனால் மாதம்தான் மார்ச், 1940 ஆம் ஆண்டு லண்டனில் மைக்கேல் டயரைச் சுட்டுக் கொன்றார். உத்தம்சிங்குக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டு மாவீரர் ஜோ ரிசோல், அயர்லாந்தின் தியாகி ராபர்ட் எம்மெட் போல், உத்தம்சிங் சொன்னார்.
"பனி உறைந்த புதைகுழி அதோ எனக்காகக் காத்துக் கொண்டு இருக்கின்றது. நான் மரணத்தை மலர் மாலையாக ஏற்றுக் கொள்கின்றேன். எனக்குச் சூட்டப்படும் மலர் மாலைதான் மரணம். நாட்டுக்காக மடிகிறேன்" என்றார். ஜவஹர்லால் நேரு, ஜாலியன் வாலாபாக் வந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தை, காங்கிரஸ் தலைவர்கள் முன்னின்று நடத்தினார்கள். நான் அரசியலுக்காகப் பேசவில்லை. நீங்கள், காங்கிரஸ் கட்சியின் தலைவரையும் ஜாலியன் வாலாபாக் அறக்கட்டளையின் உறுப்பினராகச் சேர்ப்பதுதான் நீதி ஆகும்,"
இவ்வாறு வைகோ பேசினார்.