தமிழகம்

ஒரத்தநாடு அருகே திருமாவளவன் கார் மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி: பொறியாளர்கள் உட்பட 12 பேர் கைது

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு வரவிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் கார் மீது, கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசத் திட்டமிட்டிருந்த 12 இளைஞர்களை நேற்று முன்தினம் இரவு போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை மற்றும் பேராவூரணியில் நடைபெறும் திருமண விழாக்களில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கார் மூலம் நேற்று முன்தினம் வந்துள்ளார்.

அவர் நிகழ்ச்சி முடிந்து நேற்று முன்தினம் பிற்பகலில் திரும்பும் வழியில், ஒரத்தநாட்டில்; இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள வடசேரி கிராமத்தில் உள்ள கடைத் தெருவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை அவர் ஏற்ற திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொடியேற்ற வரும் திருமாவளவன் கார் மீது கற்களை வீச, சில இளைஞர்கள் ‘வாட்ஸ் அப்’ மூலம் தகவல் பரிமாறிக்கொள்வதாக, தஞ்சை மாவட்ட காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் வடசேரியில் குவிக்கப்பட்டு, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனால், அந்த இளைஞர்கள் வடசேரி - பட்டுக்கோட்டை சாலை யில் உள்ள ஆலத்தூர் புதுக்குளம் பகுதிக்குச் சென்று, அங்கு ஒளிந் திருந்து, திருமாவளவனின் கார் மீது கற்களை வீசக் காத்திருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, போலீஸார் அங்கு சென்றுள்ளனர்.

அப்போது, அரைக்கால் சட்டை அணிந்திருந்த அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் போலீஸார் மீது கற்களை வீசித் தாக்கிவிட்டு, தப்பியோடியுள்ளனர். கல்வீச்சில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், காந்தி ஆகியோர் காயமடைந்தனர்.

அங்கு 50-க்கும் மேற்பட்ட கருங்கற்கள், பெட்ரோல் நிரப்பி, திரி பொருத்தப்பட்ட 2 பீர் பாட்டில்கள், 2 பெட்ரோல் நிரப்பிய பிளாஸ்டிக் பாட்டில்கள், சில காலி பீர் பாட்டில்களை போலீஸார் கைப்பற்றினர்.

இதையடுத்து, வடசேரியில் கொடியேற்றும் நிகழ்ச்சியைத் தவிர்க்கும்படி போலீஸார், திருமாவளவனிடம் தெரிவித்தனர். மேலும், மன்னார்குடி ஒன்றியம் வடபாதியில் நடந்த கட்சியினரின் நிகழ்ச்சிக்கு, முத்துப்பேட்டை வழியாக பாதுகாப்புடன் அவரை போலீஸார் அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக, வடசேரியைச் சேர்ந்த மணிகண்டன், மதியழ கன், வினோத்குமார், மணிமாறன், மனோ கரன், யோகேஷ்வரன், கண் ணன், திவாகர். அன்பானந் தன், சரண்ராஜ், திருமங்கலக் கோட்டைசேதுராமன் ஆகியோரை நேற்று முன்தினம் நள்ளிரவில் போலீஸார் கைது செய்து, நேற்று அதிகாலை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சென்னையில் பணிபுரிந்து வருவதும், சிலர் பொறியாளர்கள் என்றும் சொல் லப்படுகிறது.

தலைவர்கள் கண்டனம்

திருமாவளவன் மீதான இந்த தாக்குதல் முயற்சிக்கு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT