அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் ‘பாஸ்டேக்’ கட்டண முறை கட்டாயமாக்குவதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இதற்கிடையே, பாஸ்டேக் அட்டை இல்லாமல், அந்த பாதையில் பணமாக கட்டணம் செலுத்தினால் ஒரு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சுமார் 2,900 கிமீ தூர சாலைகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருவதால், சுங்கச்சாவடிகளில் நீண்டதூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இதனால், ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பரனூர், பெரும்புதூர், வாலாஜா, செங்குன்றம் போன்ற சுங்கச்சாவடிகளில் 30 முதல் 45 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இதே நிலை நீடித்து வருகிறது.
இதற்கிடையே, சுங்கச்சாவடிகளில் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க ‘பாஸ்டேக்' (FASTag - மின்னணு கட்டணம்) முறையை வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் கட்டாயமாக்கவுள்ளது. பாஸ்டேக் திட்டத்தின்படி, ஆர்எப்ஐடி (RFID - Radio-frequency Identification) சார்ந்த ‘பாஸ்டேக்' கார்டு, வாகனத்தின் விண்டுஷீல்டில் ஒட்டப்படும். சுங்கச்சாவடிகளில் இந்த பாஸ்டேக் அட்டை வழங்கப்படுகிறது.
வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன ஆர்சி (வாகன பதிவு சான்று), புகைப்படம், அடையாள அட்டை வழங்கி பெற்றுக் கொள்ளலாம். வாகனங்களுக்கு ஏற்றவாறு கட்டணம் மாறும். குறிப்பாக காருக்கு ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். இதில், ரூ.250 திரும்ப பெறும் வைப்பு தொகை, பாஸ்டேக் அட்டை கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் அட்டை பயன்படுத்துவதற்கான கட்டமைப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.
இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நாடுமுழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் (மின்னணு கட்டணம் வசூல்) முறையை டிசம்பர் 1-ம் தேதி முதல் கட்டாயமாக்கவுள்ளோம்.
இதற்காக சில தனியார், பொதுத்துறை வங்கிகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, வாகன உரிமையாளர்கள் சுங்கச்சாவடிகளில் இதற்கான பாஸ்டேக் பிரத்யேக அட்டையை வாங்கி கொண்டு, தேவையான அளவுக்கு ரீசார்ஜ் செய்து கொண்டு பயணம் செய்யலாம். இந்த அட்டையை பயன்படுத்தும்போது 10 விநாடிகளில் சுங்கச்சாவடியைக் கடந்து செல்லலாம்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 48 சுங்கச்சாவடிகளில் இருக்கும் 482 பாதைகளில் 90 சதவீதம் அளவுக்கு மின்னணு கட்டண முறை பணிகளை முடித்து விட்டோம். எஞ்சியுள்ள பணிகள் 3 நாட்களில் நிறைவடையும்.
ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் தலா ஒரே பாதையில் மட்டுமே பணம் செலுத்தி பயன்படுத்தும் முறையை அனுமதிக்க உள்ளோம். மற்ற பாதைகளில் பாஸ்டேக் அட்டை பெற்ற வாகனங்களையே அனுமதிக்கவுள்ளோம். இந்த பாதையில் பணம் கொடுத்து பயணம் செய்தால் சுங்க கட்டணம் 2 மடங்காக உயர்த்தி வசூலிக்கப்படும். இதில், ஒரு மடங்கு அபராத கட்டணமாக இருக்கும்.
தமிழகத்தில் இதுவரையில் 35 முதல் 40 சதவீதம் பேர் மட்டுமே பாஸ்டேக் அட்டை பெற்றுள்ளனர். மீதமுள்ள வாகன உபயோகிப்பாளர்களும் பாஸ்டேக் அட்டை வாங்க வேண்டுமென நாங்கள் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியும், விளம்பரம் செய்தும் வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.