வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வட்டார அளவில் வாடகைக்கு வழங்கும் மையங்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தற்போது நிலவிவரும் விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்துக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளால் வாங்க முடியாது என்பதால், அவற்றை வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்கும் திட்டத்துக்கு அரசு அதிக நிதி வழங்குகிறது. தமிழகத்தில் இதுவரை 1,510 வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மேலும் 304 மையங்கள் அமைக்க ரூ.30 கோடியே 40 லட்சத்தை அரசு வழங்கியுள்ளது. ரூ.25 லட்சம் மதிப்பில் வட்டார அளவிலான ஒரு வாடகை மையம் அமைக்க 40 சதவீதம் மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
மையம் அமைக்க விரும்புவோர் வேளாண்மைப் பொறியியல் துறையின் வருவாய்க் கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அல்லது மாவட்ட அளவிலான செயற் பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு சென்னை நந்தனத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை தலைமைப் பொறியாளரை 044 – 29515322, 29510822, 29510922 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது aedcewrm@gmail.com என்ற இ-மெயிலிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும், உழவன் கைபேசி செயலியில் மானியத் திட்டங்கள் என்ற பகுதியைத் தேர்வு செய்து, CHC-வேளாண் இயந்திர வாடகை மையம் என்ற பக்கத்தில் மானிய விவரம், தகுதி, தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.