தமிழகம்

கமலுடன் இணைய வேண்டிய சூழல் வந்தால் இணைவேன்: ரஜினி 

செய்திப்பிரிவு

கமலுடன் இணைய வேண்டிய சூழல் வந்தால் இணைவேன் என ரஜினிகாந்த் தெரிவித்தார். அதற்கு சில மணி நேரம் முன்னர் அதே இடத்தில் கமலும் இதே கருத்தைக் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

தமிழக திரைப்படத்துறையில் இரு துருவங்களாக இருப்பவர்கள் கமலும், ரஜினியும். கமல் 60 ஆண்டுகால சினிமா பயணத்துக்கு சொந்தக்காரர். ரஜினி 45 ஆண்டுகால சினிமாவுக்கு சொந்தக்காரர். இருவரும் திரையுலகில் தொழில் சார்ந்து அல்லாமல் தனிப்பட்ட முறையிலேயே நல்ல நண்பர்கள்.

கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப்பின் ஒருவர் அரசியலுக்கு வந்தார், ஒருவர் அரசியலுக்கு கட்டாயம் வருவேன் என அறிவித்துள்ளார். ஆனால் இருவருமே வெற்றிடம் இருப்பதாக நம்புகின்றனர்.

கமல், ரஜினி இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என சமீபத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் ரஜினி கமல் கலந்துக்கொண்ட கூட்டத்தில் தெரிவிக்க அது குறித்து இருவரும் பதிலளிக்காத நிலையில் இருவரும் இணைய உள்ளதாக சில ஊடகங்கள் யூக அடிப்படையில் விவாதத்தை கிளப்பின.

அதனடிப்படையில் இன்று கமலிடம் கேள்வி எழுப்பியபோது தேவைப்பட்டால் தமிழக நலனுக்காக இருவரும் இணைவோம், கொள்கை முரண்பாடு குறித்தெல்லாம் இப்ப ஏன் பேசணும் என பதிலளித்திருந்தார். அதே போன்று முதல்வர் எடப்பாடி குறித்து ரஜினி பேசியதும் சர்ச்சை ஆனது.

அதுகுறித்தும் பதிலளித்த கமல் ரஜினிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். ரஜினி சொன்னது நிதர்சனமான உண்மை என ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் கோவா செல்வதற்காக விமான நிலையம் வந்த ரஜினியிடம் இதே கேள்வியை வைத்தபோது அவர் அளித்த பதில்:

“(முதல்வர் குறித்து) நான் தெரிவித்த கருத்துக்கு ஓபிஎஸ் எனக்கு கண்டனம் தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து, அதுகுறித்து பதில் கூற விரும்பவில்லை, நான் கமலுடன் இணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன்”

என தெரிவித்துள்ளார். தற்போது அது புதிய விவாதத்தை தூண்டிவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT