தமிழகம்

சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையங்களில் 24 மணி நேர பாதுகாப்பு பணிக்கு புதிய காவலர்கள் நியமனம்: ரயில்வே பாதுகாப்பு படை மூத்த அதிகாரி தகவல்

கி.ஜெயப்பிரகாஷ்

சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையங்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணிக்கு புதிய காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலான மின்சார ரயில் நிலையங்களிலும் தலா 2 காவலர்கள் நியமிக்கப்பட்டு இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக செல்கிறது. இங்கு பயணிகளிடமிருந்து செயின் பறிப்பு, பணம் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்கள் அடிக்கடி நடக்கின்றன. சமீபத்தில் கஸ்தூரிபாய் நகர் பறக்கும் ரயில் நிலையத்தில் பெண் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர்.

புறநகர் மின்சார ரயில் நிலை யங்களில் பாதுகாப்பு மேம்படுத்தும் பணிகள் குறித்து சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படையின் மூத்த ஆணையர் அஷ்ரப் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

சென்னை கோட்டத்துக்கு காலியாக இருந்த 490 ரயில்வே பாதுகாப்பு படை யின் காலிப் பணியிடங்கள் சமீபத்தில் நிரப்பப்பட்டுள்ளன. இதனால், பறக்கும் ரயில் நிலையங்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முழுமையான அட்டவணை தயாரித்து ரயில்வே பாதுகாப்பு படையினரை நியமித்துள்ளோம்.

மேலும், சென்னை செங்கல்பட்டு மார்க்கத்தில் அதிகமாக குற்றங்கள் நடக்கும் இடங்களாக பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர், சிங்கப்பெருமாள்கோவில், வண்டலூர், பொத்தேரி ஆகிய இடங்களை கண்டு கொண்டுள்ளோம். இந்த ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏற்கனவே தாம்பரம் வரையில் போதிய அளவில் ரயில்வே பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தாம்பரம் செங்கல்பட்டு வரை தலா 2 காவலர்களை நியமித்துள் ளோம். இவர்கள் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரையில் பணியில் ஈடுபடவுள்ளனர் மப்டியிலும் காவலர்களை பணியாற்றிட உத்தரவிட்டுள்ளோம் என்றார்.

SCROLL FOR NEXT