வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட மயிலாப்பூர் வட்டாட்சியர் குறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் பொறி வைத்துப் பிடித்தனர்.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் கிரீன்வேஸ் சாலையில் உள்ளது மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகம். இங்கு வட்டாட்சியராக இருப்பவர் சுப்ரமணி. இவருக்குக் கீழ் மயிலாப்பூர் பகுதியின் மக்கள் பிரச்சினைகள் அனைத்தும் வரும்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தும் அனைத்து வருவாய்த்துறை சார்பான 38 அரசுப் பணிகளும் வட்டாட்சியர் வழியாக வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர் போன்றவர்களின் பரிந்துரைகளின் பேரில் சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ், நில உடைமைச் சான்றிதழ் போன்று பல சான்றிதழ்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.
வட்டாட்சி அமைப்புக்குள் மக்களிடையே பிரச்சினைகள் ஏதும் வந்து சட்டம் , ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாதவாறு முன்கூட்டியே செயல்படுவதற்கு வாய்ப்பாக இரண்டாம் நிலை நீதித்துறை நடுவராகவும் வட்டாட்சியர் செயல்படுகிறார்.
வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து அரசு மற்றும் அரசு சாராத அமைப்புகளின் செயல்பாடுகளின் மீதான புகார்களை விசாரித்து இவருடைய கட்டுப்பாட்டுக்குள் வரும் அதிகாரங்களைக் கொண்டு கட்டுப்படுத்தும் அதிகாரியாகவும் வட்டாட்சியர் செயல்படுகிறார்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோருக்கு வருவாய்த்துறைப் பணிகளும் வட்டாட்சியருக்குக் கீழ்தான் வரும். இத்தகைய அதிகாரமிக்க பொறுப்பில் இருப்பவர்கள் தங்களது பிரச்சினைக்காக வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவது பல இடங்களில் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினை.
பலரும் லஞ்சம் கொடுத்து வேலையை முடித்துச் செல்வது இவர்களுக்கு வசதியாகிவிடுகிறது. பணம் கொடுக்காதவர்கள் வேலை இழுத்தடிக்கப்படும்.
இந்நிலையில் மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தனது சகோதரிக்கு வாரிசு சான்றிதழ் வாங்க, வட்டாட்சியர் சுப்ரமணியை அணுகியுள்ளார்.
வழக்கம்போல் இழுத்தடிக்கப்பட, வட்டாட்சியர் சுப்ரமணியை அணுகி ரவிச்சந்திரன் விவரம் கேட்டார். ஒரு முக்கியமான பேப்பர் மிஸ்ஸிங். அதைக் கொடுத்தால் வேலை முடியும் என்று வட்டாட்சியர் கூறியுள்ளார். ரூ.25 ஆயிரம் தந்தால் சான்றிதழ் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யோசிப்பதாகக் கூறிய ரவிச்சந்திரன், லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி முதல் தவணையாக 10 ஆயிரம் ரூபாய் தருகிறேன். பின்னர் வேலை முடிந்தவுடன் மீதிப் பணம் தருகிறேன் என வட்டாட்சியர் சுப்ரமணியிடம் ரவிச்சந்திரன் கூறியுள்ளார். அதன்படி, இன்று மதியம் அலுவலகத்தில் வைத்து ரூ.10 ஆயிரம் தருவதாக ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புகார்தாரர் ரவிச்சந்திரன்
ரூ.10 ஆயிரத்தில் ரசாயனப் பவுடரைத் தடவிக் கொடுத்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் பொதுமக்கள் போல் ஆங்காங்கே நின்றுள்ளனர். சொன்னபடி ரவிச்சந்திரனும், அவரது சகோதரியும் சென்று பணத்தைக் கொடுக்க, அதை வட்டாட்சியர் சுப்ரமணி வாங்கும்போது, தயாராக இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரைப் பிடித்துக் கைது செய்தனர்.
வட்டாட்சியர் சுப்ரமணியை அலுவலகத்தில் அமரவைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது அறை முழுவதும் சோதனையிடப்பட்டு வருகிறது. சமீபத்தில் குடிநீர் வாரிய பெண் உயர் அதிகாரி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது கையுங்களவுமாகப் பிடிபட்டு கைது செய்யப்பட்டார்.
தற்போது மேஜிஸ்திரேட் அந்தஸ்தில் உள்ள வட்டாட்சியரே சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.