தமிழகம்

கோயம்பேடு உள்ளிட்ட 352 பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை: முதல்வர் திறந்துவைத்தார்

செய்திப்பிரிவு

கோயம்பேடு உட்பட 352 பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள தாய்ப்பால் வங்கிகளை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''உலக தாய்ப்பால் ஊட்டும் வாரம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. ‘தாய்ப்பால் புகட்டுதலுடன் பணி செய்தல் - இதை சாத்தியமாக்குவோம்’ என்ற கருப்பொருளை கொண்டு இந்த ஆண்டு உலக தாய்ப்பால் ஊட்டும் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

பாலூட்டும் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு தனிமையில் வசதியாக பாலூட்டும் வகையில் அரசு பேருந்து முனையங்கள், நகராட்சி, நகர பேருந்து நிலையங்கள், பணிமனைகளுடன் கூடிய பேருந்து நிலையங்களில் தனி அறைகள் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தில் குடிநீர், இருக்கை, கைகழுவும் வசதிகளுடன் அமைக்கப்பட்ட பாலூட்டும் தாய்மார்களுக்கான 2 தனி அறைகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். அப்போது, தாய்மார்கள் தங்கள் உடமைகளை வைக்க வசதியாக, அந்த அறைகளில் சிறிய மேஜை மற்றும் பெஞ்ச் வைக்கப்பட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தினார். இதுதவிர தமிழகம் முழுவதும் 351 பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தனி அறைகளையும் முதல்வர் திறந்து வைத்தார்.

தாய்ப்பால் வங்கி

குழந்தை பிறந்தவுடன் சில தாய்மார்களுக்கு முற்றிலுமோ, போதுமான அளவுக்கோ தாய்ப்பால் கிடைப்பதில்லை. எடை குறைந்த, குறைமாத குழந்தைகளை காப்பாற்ற தாய்ப்பால் மிக அவசியம். பல்வேறு காரணங்களால் தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்காக கடந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி திறக்கப்பட்டது.

முதல்வர் உத்தரவைத் தொடர்ந்து திருச்சி, மதுரை, கோவை, தேனி, சேலம், தஞ்சை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை என 7 அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வங்கிகளை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்துவைத்தார்.

ஒவ்வொரு தாய்ப்பால் வங்கிக்கும் ரூ.10 லட்சம் மதிப்பில் உறைநிலை குளிர்பதன கருவி, கிருமி நீக்கி தாய்ப்பால் எடுக்கும் கருவிகள், குளிர்சாதன பெட்டி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இந்த வங்கிகளில் தானமாக பெறப்படும் தாய்ப்பாலை பதப்படுத்தி 3 மாதங்கள் வரை சேமித்து, தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு வழங்க முடியும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT