தனுஷ்கோடி அரிச்சல் முனையில் அணிவகுத்து நிற்கும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள்.  
தமிழகம்

தனுஷ்கோடி அரிச்சல்முனை தேசிய நெடுஞ்சாலை மீண்டும் திறப்பு: சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்

செய்திப்பிரிவு

தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்பகுதியில் பருவ கால நீரோட்டத்தினால் சேதமடைந்த சாலையின் தடுப்புச் சுவர் சீரமைக்கப்பட்டு திங்கட்கிழமை திறக்கப்பட்டது. இதையடுத்து தனுஷ்கோடியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

ராமேசுவரத்தில் உள்ள அக்னி (கடல்) தீர்த்தமும், தனுஷ்கோடி அரிச்சல் முனையில் சேது (கடல்) தீர்த்தமும் பிரதான தீர்த்தங்களாகும். இந்த தீர்த்தங்களில் நீராடுவதால் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் இங்கு புனித நீராட இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் ராமேசுவரம் வருகின்றனர்.

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் பருவ கால நீரோட்டத்தால் அரிச்சல்முனையின் பெரும்பாலான பகுதி ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் மூழ்கிய நிலையில் காணப்படும். இந்நிலையில் கடந்த அக்டோபர் 19 அன்று அரிச்சல்முனை பகுதி மூழ்கத் தொடங்கியது. சாலையோர தடுப்புச் சுவர் கடல் நீரின் அரிப்பால் உடைந்தது.

இதனால் அரிச்சல்முனை கடல் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. அரிச்சல்முனையில் பொதுமக்கள் கடலில் இறங்கி நீராடுவதைத் தவிர்க்க தனுஷ்கோடி பழைய தேவாலயம் அருகே வாகனங்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் கடந்த ஒரு மாதமாக தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை கடல் பகுதிகளில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

இந்நிலையில் கடல் அரிப்பினால் சேதமடைந்த தடுப்புச் சுவர்கள் சீரமைக்கப்பட்டன. ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் தனுஷ்கோடி அரிச்சல்முனை தேசிய நெடுஞ்சாலை திங்கட்கிழமை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை கடற் கரையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

- எஸ். முஹம்மது ராஃபி

SCROLL FOR NEXT