தமிழகம்

அமராவதி ஆற்றின் கரையோரத்தில் இளம்பெண் கழுத்து நெரித்து கொலை

செய்திப்பிரிவு

மூலனூர் அருகே இளம் பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் காவல் எல்லைக்கு உட்பட்ட மாலமேடு கவுண்டப்ப கவுண்டனூர் அருகே இளம் பெண் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்று ஆய்வு செய்தனர். இதில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வாயில் துணியை வைத்து அழுத்தியும், துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டு, முட்புதரில் உடல் வீசப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. சடலத்தை மீட்டு, திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் சென்று ஆய்வு செய்தார்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘உயிரிழந்த பெண் யார் என்ற விவரங்கள் தெரியவில்லை. திருப்பூர் மற்றும் கரூர் எல்லை அமராவதி ஆற்றின் கரையோரத்தில் இளம்பெண் இறந்துகிடப்பதாகவே தகவல் கிடைத்தது.

முதலில் சம்பவ இடத்துக்கு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி போலீஸார் சென்று பார்வையிட்டனர். அதற்கு பிறகே சம்பவம் நிகழ்ந்த இடம் திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் மாலை தொடங்கி அந்த வழியாக வந்து சென்ற கார், இருசக்கர வாகனங்களின் விவரங்களை சேகரித்து வருகிறோம். கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்தும் விசாரித்து வருகிறோம்' என்றனர்.

SCROLL FOR NEXT