செங்குன்றம் அருகே பட்டப்பகலில் அதிமுக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே சோலையம்மன் நகரைச் சேர்ந்தவர் கோட்டைசாமி (48). நல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான இவர், சோழவரம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக இருந்து வந்தார். ரியல் எஸ்டேட், மண் குவாரி ஆகிய தொழில்களில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை 11.30 மணியளவில் செங்குன்றம் அருகே உள்ள ஈஸ்வரன் நகரில் நின்று கொண்டிருந்த அவரை, மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது. இதில், பலத்த காயமடைந்த கோட்டைசாமி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து, செங்குன்றம் போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில், சோலையம்மன் நகரைச் சேர்ந்த பொதுமக்கள், கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, திருவள்ளூர்- செங்குன்றம் சாலையில் நேற்று மாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸாரின் சமாதானத்துக்கு பிறகு கலைந்து சென்றனர்.