புத்தாண்டு மலர்வதற்குள் உள்ளாட்சிகளில் புதிய நிர்வாகம் மலர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுடன் மொத்தம் 9 மாவட்டங்களுக்கு தொகுதி மறுவரையறைப் பணிகளை முழுமையாக முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
அதே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பாணையை டிசம்பர் 13-ம் தேதிக்குள் மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிடும் என நம்புவதாக தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை அந்தத் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக இன்று (நவ.19) பாமக நிறுவனர் ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், "5 புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தைக் காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தலை தாமதப்படுத்தும் முயற்சிகள் ஆபத்தானவை. இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும். விரைவாக தேர்தல்கள் நடத்தப்பட்டு புத்தாண்டு மலர்வதற்குள் உள்ளாட்சிகளில் புதிய நிர்வாகம் மலர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.