தமிழகம்

தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலம், ஆக்கிரமிப்புகள் குறித்த புள்ளிவிவரம் தாக்கல் செய்ய வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் உள்ள 38 ஆயிரம் கோயில்களின் நிலங்கள் மற்றும் அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான புள்ளி விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் வகையில் தமிழக அரசு கடந்த ஆகஸ்ட்டில் அரசாணை பிறப்பித்தது. இதை ரத்து செய்யக் கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அமர்வு இதுதொடர்பாக அரசுத் தரப்பு பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

‘‘ஆட்சேபம் இல்லாத அரசு புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபம் இருந்தால் அந்த நிலங்கள் அடையாளம் காணப்பட்டு, அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்’’ என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘இந்த அரசாணை எல்லா மத வழிபாட்டு தலங்களுக்கும் பொருந்துமா?’’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ‘‘இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு மட்டுமே இது பொருந்தும்’’ என்று அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், இந்து சமய அறநிலையத் துறை வழக்கறிஞர் எம்.மகாராஜா தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் கூறியதாவது:இதன்மூலம் கோயில் நிலங்களை விற்பனை செய்ய அறநிலையத் துறையை அரசு நிர்ப்பந்தம் செய்கிறதா? அரசு தரப்பு கூறுவதை ஏற்க முடியாது. தமிழகம் முழுவதும் உள்ள 38 ஆயிரம் கோயில்களின் நிலங்கள், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான புள்ளி விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், பிரதான வழக்கு விசாரணையை தள்ளிவைத்து, அரசாணைக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT