தீபக் 
தமிழகம்

76 துணை ராணுவ வீரர்கள் மரணத்தில் மாவோயிஸ்ட் தீபக்குக்கு தொடர்பு? - சத்தீஸ்கர் காவல்துறையினர் கோவையில் விசாரணை

செய்திப்பிரிவு

கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீபக்குக்கு, 76 துணை ராணுவப்படை வீரர்களை கொன்ற வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படை மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினரிடம் கடந்த 9-ம் தேதி பிடிபட்ட மாவோயிஸ்ட் தீபக் என்ற சந்துரு(32), தப்பி ஓடியபோது பள்ளத்தில் விழுந்து, இடது காலில் காயம் ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

காவலில் எடுக்க மனு

சிறப்புக் காவல் படை ஆய்வாளர் பி.கே.ஜான் அளித்த புகாரின் பேரில், தடாகம் காவல் துறையினர் தீபக் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.விசாரணையில், தீபக் மீது சத்தீஸ்கர், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தீபக்கிடம் கூடுதல் தகவல் பெற, அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக, தடாகம் காவல்துறையினர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்து, இன்றைய தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே, தீபக் பிடிபட்ட தகவல் கிடைத்தவுடன், சத்தீஸ்கர் மாநில காவல்துறையினர் டிஎஸ்பி தலைமையில் நேற்று முன்தினம் இரவு கோவைக்கு வந்தனர். மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தீபக்கை சந்தித்து விசாரித்தனர்.

‘‘சத்தீஸ்கர் மாநிலத்தின் டான்டிவாடா மாவட்டத்தில் உள்ள சின்டல்நகர் பகுதியில் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி சி.ஆர்.பி.எப் துணை ராணுவப்படையினர் 76 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஆயுதங்களுடன் திரண்ட 300-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள், துணை ராணுவப் படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 76 துணை ராணுவப்படையினர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சத்தீஸ்கர் மாநில காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதலில், கோவையில் கைதான மாவோயிஸ்ட் தீபக்கிற்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர, அங்குள்ள சுக்மா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களிலும் தீபக்குக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் ஆயுதங்கள் வைத்திருத்தல், போலீஸாரை தாக்கியது உள்ளிட்ட 3 வழக்குகள் தீபக் மீது பதிவாகியுள்ளது. தீபக் அங்குள்ள கொரில்லா படையில் உறுப்பினராகவும், ஆயுதப் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்’’ என சத்தீஸ்கர் காவல்துறையினர் கூறியதாக, கோவை மாவட்ட காவல்துறையினர் தெரிவித்தனர்.

தீபக்கிடம், பல்வேறு வழக்குகள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், காவலில் எடுத்து விசாரணை நடத்த சத்தீஸ்கர் மாநில காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நேற்று அவர்கள் மனுதாக்கல் செய்ய வந்தனர். அப்போது அவர்கள் இந்தி மொழியில் மனு எழுதியிருந்தனர். இங்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே வழக்கத்தில் உள்ளதை அறிந்து வேறு மனு தாக்கல் செய்ய திரும்பிச் சென்றனர். அதேசமயம், கோவை காவல்துறையினர் தீபக்கை காவலில் எடுத்தாலும், தாங்களும் இணைந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT