தமிழகம்

முதல்வர் பழனிசாமி குறித்த ரஜினியின் கருத்தைக் கண்டிக்கிறேன்: சென்னை திரும்பிய ஓபிஎஸ் பேட்டி 

செய்திப்பிரிவு

முதல்வர் பழனிசாமி பதவியேற்றது குறித்து நடிகர் ரஜினி கூறிய கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். எந்தத் தேர்தல் எப்போது வந்தாலும் அதைச் சந்திப்பதற்கு அதிமுக தயாராக உள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

முதல்வர் பழனிசாமி கடந்த செப்டம்பரில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அவரைத் தொடர்ந்து, தொழில் முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமெரிக்காவில் 10 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டார்.

இதற்காக அவர், கடந்த 8-ம் தேதி அதிகாலை சென்னையில் இருந்து புறப்பட்டு அமெரிக்காவின் சிகாகோ நகருக்குச் சென்றார். இந்நிலையில் சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தங்கத் தமிழ் மகன் விருது வழங்கப்பட்டது. மேலும், 'சர்வதேச வளரும் நட்சத்திரம் - ஆசியா’,'உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது-2019’ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.

இந்தப் பயணத்தின்போது, தமிழகத்தின் புதிய திட்டங்களுக்குத் தேவையான நிதி குறித்து உலக வங்கியின் தெற்காசிய பிரிவு உயர் அதிகாரிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். தொழில் முதலீடுகள் திரட்டுவது குறித்து சிகாகோ, வாஷிங்டன், ஹூஸ்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் உள்ள முதலீட்டாளர்களைச் சந்தித்தார்.

அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''அமெரிக்க சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. அமெரிக்க வாழ் இந்தியர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளனர். முதல்வர் பழனிசாமி பதவியேற்றது குறித்து நடிகர் ரஜினி கூறிய கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். எந்தத் தேர்தல் எப்போது வந்தாலும் அதைச் சந்திப்பதற்கு அதிமுக தயாராக உள்ளது'' என்றார்.

பின்னணி:

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் நவம்பர் 7-ம் தேதி தனது 65-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். திரையுலகிற்கு கமல் வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி ’கமல் 60’ என்ற தலைப்பில் 'உங்கள் நான்' என்ற நிகழ்ச்சி நேற்று (நவம்பர் 17) நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரஜினி பேசும்போது, "2 ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். அவர் முதல்வரானவுடன் ஆட்சி 20 நாட்கள் கூட தாங்காது. 1 மாதம் தாங்காது. 5 மாதத்தில் கவிழ்ந்துவிடும் என்று 99% பேர் சொன்னார்கள். அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது. ஆட்சி கவிழவில்லை. எல்லாத் தடைகளையும் தாண்டி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நேற்று அதிசயம், அற்புதம் நடந்தது. இன்றும் அதிசயம், அற்புதம் நடக்கிறது. நாளைக்கும் அதிசயம், அற்புதம் நடக்கும்'' என்றார்.

ரஜினியின் இந்தப் பேச்சு விவாதத்தை எழுப்பியது. இந்நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ், ரஜினியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT