தமிழகம்

பெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து: ஸ்டாலின் கண்டனம்

செய்திப்பிரிவு

பெரியார் குறித்த பாபா ராம்தேவ் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், ஆதிக்க சக்திகளுக்கு எதிரான திராவிடக் கருத்தியலை திமுக என்றும் பாதுகாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பாபா ராம்தேவ் கடந்த 11-ம் தேதி அன்று ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். அதில் ''பெரியார் அறிவுசார்ந்த பயங்கரவாதி. பெரியார் மற்றும் அம்பேத்கரின் ஆதரவாளர்களைப் பார்த்து நான் கவலை கொள்கிறேன்'' என்று தெரிவித்தார். பாபா ராம்தேவின் இப்பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாபா ராம்தேவ் தன் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர். #Ramdev_Insults_Periyar,#ArrestRamdev என்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்ட் ஆகின.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் ராம்தேவ் கருத்துக்குப் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட பதிவில், ''தந்தை பெரியார் மற்றும் எங்களது கொள்கைகள் மீது வலதுசாரி சக்திகளால் குறிவைத்து நிகழ்த்தப்படும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். தந்தை பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார். பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தார். சாதி முறைக்கு எதிராகப் பேசினார். ஆதிக்க சக்திகளுக்கு எதிரான திராவிடக் கருத்தியலை திமுக என்றும் பாதுகாக்கும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT