தமிழகம்

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 2 புதிய முதுகலை ரத்தப்பரிமாற்று படிப்புகள் அறிமுகம்: தமிழகத்திலேயே முதல் முறையாக தொடக்கம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 2 புதிய முதுகலை ரத்தப்பரிமாற்று படிப்புகள் தொடங்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது. இந்த படிப்புகள் தமிழகத்திலே முதல் முறையாக மதுரையில் தொடங்கப்படுகிறது.

மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் ரத்தப்பரிமாற்றுத்துறையில் எம்டி படிக்க 2 புதிய முதுகலைப்பட்டப்படிப்புகள் தொடங்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் 23 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. மேலும், புதிதாக 6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. இதில், சென்னைக்கு அடுத்து மதுரை முக்கியமான மருத்துவக்கல்லூரியாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தொடங்கப்பட்டது. விரைவில் ஒவ்வொரு மருத்துவ சிகிச்சைப்பிரிவுக்கும் ஆராய்ச்சி மையமும் தொடங்கி சிகிச்சை தரத்தை மேம்படுத்த மருத்துவக்கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரை மருத்துவக்கல்லூரியில் 150 ஆக இருந்த எம்பிபிஎஸ் ‘சீட்’ எண்ணிக்கை இந்த ஆண்டு 250 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.

எம்டி, எம்எஸ்(பட்டமேற்படிப்புகள்) படிப்புகளுக்கு 184 ‘சீட்’கள் உள்ளன. சூப்பர் ஸ்பெஷாலிட்டி(சிறப்பு பட்டமேற்படிப்புகள்) 43 ‘சீட்’கள் உள்ளன.

தற்போது ரத்தப்பரிமாற்றுத்துறையின் கீழ் மாணவர்கள் ‘எம்டி’ படிப்பில் 2 புதிய படிப்புகள் தொடங்குவதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் மதுரை மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி வழங்கி உள்ளது.

இதுகுறித்து ‘டீன்’ சங்குமணி கூறுகையில், ‘‘ரத்தப்பரிமாற்றுத் துறையின் கீழ் மாணவர்கள் எம்டி(IMMUNO HAEMATOLOGY & TRANSFUSION MEDICINCE) படிக்க 2 புதிய முதுகலைப் பட்டப்படிப்பு இடங்கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு அடுத்த கல்வி ஆண்டில் (2020-21) மாணவர் சேர்க்கை நடக்கும். இந்த பட்டப்படிப்பு தொடங்க அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே தமிழகத்தில் மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரிகளில் மட்டும் ரத்தப்பரிமாற்று எம்டி முதுகலைப்படிப்புகள் தொடங்க முதல் முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த படிப்புகள் ரத்தம் மற்றும் ரத்தம் பரிமாற்று சம்பந்தமான படிப்பு என்பதால் ரத்தத்தால் வரும் நோயாளிகள், யாருக்கு ரத்தம் கொடுக்கலாம், ரத்தம் கொடுக்கக்கூடாது என்பதை பற்றி கண்டறியலாம்.

அந்த படிப்புகளை மாணவர்களும் படித்து பயன்பெறலாம். ரத்தத்தில் உள்ள அணுக்களை பற்றி ஆராயலாம். தமிழகத்தில எம்ஜிஆர் மருத்துவக்கல்லூரியில் மட்டுமே உள்ளது. மருத்துவக்கல்லூரிகள் அடிப்படையில் மதுரையில் தமிழகத்திலே முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது, ’’ என்றார்.

SCROLL FOR NEXT