இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் இருந்து 3டி எனப்படும் முப்பரிமாண படங்களை அனுப்பியது. அதனை இஸ்ரோ வெளியிட்டு, தன் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துள்ளது.
மங்கள்யான் விண்கலத்தால் கடந்த ஜூலை 19ம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் காட்டும் இடம், செவ்வாய் கிரகத்தில் உள்ள ஓஃபிர் சஸ்மா என்ற பள்ளத்தாக்கு என்று இஸ்ரோ விவரித்துள்ளது.
மேலும், செவ்வாய் கிரகத்தில் இருந்து சுமார் 1,857 கி.மீ. உயரத்தில் நின்று இந்தப் படத்தை மங்கள்யான் படம்பிடித்துள்ளது என்றும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பரில் செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யானை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியது. அதன் மூலம், முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு என்ற சாதனையைப் பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.