விவசாய விளைநிலங்களின் வழியாக உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி நால் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
விவசாய விளைநிலங்களின் வழியாக உயர் மின் அழுத்த கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உயர் மின்னழுத்த கோபுரங்களுக்கு எதிரான சங்கங்களின் கூட்டியக்கத்தின் சார்பில் இன்று (நவ்.18) 13 மாவட்டங்களில் 50 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று (நவ.18) மொடக்குறிச்சி நால் ரோட்டில் 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கினார். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
அதேபோன்று, ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, மொடக்குறிச்சி, பவானி ஆகிய இடங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. சென்னிமலையில் 74 பேரும், பவானியில் 50-க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
கோவிந்தராஜ்