1996-ம் ஆண்டிலேயே ரஜினி முதல்வராகியிருப்பார் என, அவரது ஆதரவாளர் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற 'கமல் - 60' விழாவில் பேசிய ரஜினிகாந்த், "2 ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். அவர் முதல்வரானவுடன் ஆட்சி 20 நாட்கள் கூட தாங்காது. 1 மாதம் தாங்காது. 5 மாதத்தில் கவிழ்ந்துவிடும் என்று 99% பேர் சொன்னார்கள். அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது. ஆட்சி கவிழவில்லை. எல்லா தடைகளையும் தாண்டி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நேற்று அதிசயம், அற்புதம் நடந்தது. இன்றும் அதிசயம், அற்புதம் நடக்கிறது. நாளைக்கும் அதிசயம், அற்புதம் நடக்கும்" எனப் பேசினார்.
இதுதொடர்பாக இன்று (நவ.18) கராத்தே தியாகராஜன் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "கட்சி ஆரம்பித்து, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என, 2017-ல் மிகத்தெளிவாக ரஜினிகாந்த் சொல்லியிருக்கிறார்.
1996-ல், முதல்வர் பதவி தன்னைத் தேடி வரும் என ரஜினி சொன்னார். அன்றைக்கே ரஜினி முதல்வராகியிருக்க வேண்டியவர். ஜி.கே.மூப்பனாரும் ரஜினியை ஆதரித்தார். 1996-ம் ஆண்டிலேயே முதல்வராகியிருப்பார் ரஜினி. கருணாநிதி, மூப்பனார் போன்றவர்களின் மீது இருந்த அபிமானத்தால் அரசியல் வேண்டாம் என்றிருந்தார்.
எடப்பாடி பழனிசாமி, இது ஜெயலலிதாவின் ஆட்சிதான் என்கிறார். தன்னுடைய ஆட்சி என சொல்லவில்லை. அங்கேயே இரட்டைத் தலைமை இருக்கிறது. 2021-ல் தான் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். முதல்வராக எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுவிட்டார் என்ற அர்த்தத்தில்தான் ரஜினி கூறியிருக்கிறார்.
அரசியல் வெற்றிடத்தை ரஜினிதான் நிரப்புவார். எம்ஜிஆரின் அன்பைப் பெற்றவர் ரஜினி. அப்போதே பல விஷயங்களுக்கு ரஜினி குரல் கொடுத்திருக்கிறார். கட்சி ஆரம்பித்தால் கட்டாயம் ரஜினிதான் முதல்வர். கோட்டையில் அவர்தான் கொடியேற்றுவார்" என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்டத் தலைவராக இருந்தவர் கராத்தே தியாகராஜன். இவர் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து நிற்க வேண்டும் என்று கராத்தே தியாகராஜன் கூறியதே தற்காலிக நீக்கத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.