தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக பல இடங்களில் குடியிருப்புகளை சூழ்ந்து மழைநீர் தேங்கி நிற்பதால் மக்கள் கடும் சிரமங்களை சந்திக்கின்றனர். மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மழை வெள்ளம் தேங்கி நின்ற பகுதிகளை எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் லேசான மழை பெய்தாலே மழைநீர் பல நாட்களுக்கு தேங்கி நிற்கும் பரிதாப நிலை தொடர்கிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தூத்துக்குடி பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருமளவில் தேங்கியது.
முக்கிய சாலைகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுத்த போதும், பல இடங்களில் குடியிருப்புகளை சூழ்ந்து மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு பாதிக்கப் பட்டுள்ளனர்.
குறிப்பாக செயின்ட் மேரீஸ் காலனி, லூர்தம்மாள்புரம், கலைஞர் நகர், வெற்றிவேல்புரம், கோக்கூர் உள்ளிட்ட பல இடங்களில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்பதால் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் காலனி பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் திரண்டு நேற்று மதியம் திடீரென தாளமுத்துநகர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் தங்ககிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மழைநீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் பெ.கீதாஜீவன் அந்த பகுதிக்கு விரைந்து வந்தார்.
மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட அவர், உடனடியாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
ஆட்சியர் உத்தரவின் பேரில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், வட்டாட்சியர் செல்வகுமார் ஆகியோர் மழைநீர் தேங்கி நின்ற பகுதிகளை பார்வையிட்டனர். பாதிப்புகளை எம்எல்ஏ, அப்பகுதி மக்களும் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினர்.
இதனை தொடர்ந்து ராட்சத மோட்டார் மூலம் மழைநீரை உறிஞ்சி வெளியேற்றும் பணி தொடங்கப்பட்டது.
ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தண்ணீர் செல்வதற்கு பாதை உருவாக்கப்பட்டு, மழைநீர் வழிந்தோட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதனால் அப்பகுதியில் மழைநீர் படிப்படியாக வடியத் தொடங்கியதால் மக்கள் நிம்மதியடைந்தனர்.