திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக சேர்வலாறு அணைப் பகுதியில் 81 மி.மீ. மழை பதிவானது. மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:
மணிமுத்தாறு- 52.80, பாபநாசம், கடனாநதி அணையில் தலா 50, அம்பாசமுத்திரம்- 42.60, பாளையங்கோட்டை- 42, ராமநதி அணை- 40, திருநெல்வேலி- 35, சிவகிரி- 31, கருப்பாநதி அணை- 29, தென்காசி- 24.30, ஆய்க்குடி- 23.60, அடவிநயினார் கோவில் அணை- 16, சேரன்மகாதேவி- 12, குண்டாறு அணை- 9, சங்கரன்கோவில்- 7, செங்கோட்டை- 6, நாங்குநேரியில் 2 மி.மீ மழை பதிவானது.
அணைகள் நிலவரம்
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கான மொத்த நீர் வரத்து விநாடிக்கு 2,654 கனஅடியாக இருந்தது. 270 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. பாபநாசம் அணை நீர்மட்டம் 128.85 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து 139.70 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1,168 கனஅடி நீர் வந்தது. 35 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 67.20 அடியாக இருந்தது.
தாமிரபரணி கரையோர பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், அணைகளில் நீர் வெளியேற்றம் குறைவாக இருந்தாலும் தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மணிமுத்தாறு அருவி, குற்றாலம் அருவிகளில் நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கடனாநதி அணை மீண்டும் நிரம்பியது. 85 அடி உயரம் உள்ள இந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலையில் 83.90 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 448 கனஅடி நீர் வந்தது. நீர்மட்டம் 84 அடியை தொட்டதும், அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. ராமநதி அணை நீர்மட்டம் 76.75 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.96 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 39.50 அடியாகவும் இருந்தது. குண்டாறு, அடவிநயினார் கோவில் அணைகள் தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளன.
தொடர் மழையால் கரையிருப்பு, சிதம்பர நகர், மனகாவலம்பிள்ளை நகர், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. திருநெல்வேலி சந்திப்பு, மதுரை சாலையில் உள்ள காவலர் குடியிருப்பு, மீனாட்சிபுரம் பகுதியில் சாலையில் மழை நீர் தேங்கிக் கிடந்தது. ஈரடுக்கு மேம்பாலம் அருகில், டவுன் அண்ணா சாலை பகுதியில் சகதியாக காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் கடும் அவதிப்பட்டனர். பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம், அண்ணா விளையாட்டு அரங்கம் பகுதிகளில் மழை நீர் தேங்கிக் கிடந்தது. திருநெல்வேலி மாநகரில் பல்வேறு பகுதிகளில் தேங்கிக் கிடந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
வீடுகள் சேதம்
தச்சநல்லூர் ஊருடையான் குடியிருப்பு பகுதியில் காசி யானந்தன் என்பவரது வீடு மழைக்கு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. இதேபோல், அதே பகுதியில் கோமு என்பவரது வீட்டின் முன் பகுதியும் இடிந்து விழுந்தது. சேத விவரங்களை வருவாய்த் துறையினர் ஆய்வு செய்தனர்.
தொடர் மழையால் திருநெல் வேலி மாவட்டத்தில் பரவலாக சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.