சென்னை ராஜதானியின் முதல்வராக 1937-ம் ஆண்டு ஜூலையில் பொறுப்பேற்ற ராஜாஜி முதல் திட்டமாக மது விலக்கை அமல்படுத்துவதில் ஆர்வம் காட்டினார். அதே ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி சேலம் மாவட்டம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார்.
சேலம் புதிய ஆட்சியர் அலு வலக கட்டிடத்தில், இந்தியாவில் முதன்முதல் சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட கல்வெட்டு பாதுகாப்பாக வைக் கப்பட்டுள்ளது.
சுதந்திர இந்தியாவில் கடந்த 1948-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழக முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பூரண மதுவிலக்கை தமிழகத்தில் கொண்டுவந்தார். இந்த மதுவிலக்கு 23 ஆண்டுகள் இருந்தது. அதன் பின்னர் திமுக ஆட்சியில் 1971-ம் ஆண்டு மதுவிலக்கு ரத்தானது.
மதுவிலக்கை வலியுறுத்தி பல ஆண்டுகளாக பல்வேறு கட்சிகளும், தன்னார்வ அமைப்புகளும் அரசுக்கு எதிராக போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. இருப்பினும், மதுவிலக்கை அமல்படுத்துவதில் வருவாயைக் காரணம் காட்டி அரசு தயக்கம் காட்டி வருகிறது.
காந்தியவாதி சசிபெருமாள் மது ஒழிப்பு பிரச்சாரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தார். இறுதியாக கடந்த 31-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அடுத்த உண்ணாமலைக்கடையில் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று 120 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டபோது உயிரிழந்தார்.
‘தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம்’ என சசிபெருமாளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம், விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல், டாஸ்மாக் கடைக்கு பூட்டு, உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுவிலக்கு போராட்டத்தில் கல்லூரி மாணவர்களும் பங்கெடுத்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பெரும் பதற்றமான நிலை நிலவி வருகிறது. போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் களம் இறக்கி விடப்பட்டுள்ளனர். அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மது விலக்கு போராட்டம் தீவிரம் அடைய சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த காந்தியவாதி சசிபெருமாளின் மரணமும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. அதே நேரம் இந்தியாவில் கடந்த 1937-ம் ஆண்டும் முதன்முதலாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது இந்த சேலம் மாவட்டத்தில்தான் என்பதும் குறிப்பிடதக்கது.