சென்னை
கிராமப்புற மக்களுக்கு வங்கிச் சேவைகள் கிடைப்பதற்காக, அனைத்துக் கிராமங்களில் உடனடி யாக கிளைகளை தொடங்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் 195 கிராமங்களில் வங்கி வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
நாட்டின் அனைத்து மக்களும் வங்கி சேவையைப் பெற வேண்டும் என்ற நோக்கில் ஜன்தன் வங்கிக் கணக்குத் தொடங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. எனினும், கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இன்னும் வங்கிச் சேவைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். வங்கிக் கணக்கு தொடங்க வேண்டுமானால் பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால், அவர்களுக்கு கால விரயமும் பண விரயமும் ஏற்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, வங்கி இல்லாத கிராமங்களைக் கண்டறிந்து அங்கு வங்கிக் கிளைகள் தொடங்கும்படி அனைத்து வங்கிகளையும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மாநில அளவிலான வங்கிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியதாவது:
குறைந்தபட்சம் 5 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் மக்கள் வசிக்கும் கிராமங்களை கண்டறிந்து அங்கு வங்கிக் கிளைகள் தொடங்கும்படி ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, இன்னும் வங்கி சேவை கிடைக்காத கிராமங்கள் எத்தனை என கண்டறியப்பட்டது. இதில், தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் 451 கிராமங்களில் வங்கிச் சேவை வசதி இல்லை என தெரியவந்தது.
இதையடுத்து, 256 கிராமங் களில் வங்கிக் கிளைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் 195 கிராமங்களில் வங்கிசேவை வசதி ஏற்படுத்தப்பட வேண்டி உள்ளது. இதில், 105 கிராமங்களில் அஞ்சல் துறை சார்பில், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஏற்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதியுள்ள கிராமங்களில் வங்கிக் கிளைகளை தொடங்குமாறு பொதுத்துறை, தனியார்துறை வங்கிகளை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கிராமப்புறங்களில் புதிதாக திறக்கப்பட்ட வங்கிக் கிளைகள் குறித்து தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம், விரைவில் அனைத்து கிராமப்புற மக்களுக்கும் வங்கி சேவை கிடைக்கும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.