வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக் குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக குலசேகரப் பட்டினத்தில் 104 மில்லி மீட்டர் மழை பதிவானது.
வெப்பச்சலனம் மற்றும் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பலத்த மழை பெய்தது. தூத்துக்குடி நகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் வி.இ.ரோடு, டபிள்யு.ஜி.சி. ரோடு, லயன்ஸ் டவுன், தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை, பிரையன்ட் நகர் மேற்கு பகுதி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பாதிக்கப் பட்டனர்.
தூத்துக்குடி டபிள்யுஜிசி. ரோட்டில் பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தூத்துக்குடி நகர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்துக்குள் மழை நீர் புகுந்தது. பொன்சுப்பையா நகர், சகாயமாதா பட்டினம், செயின்ட் மேரீஸ் காலனி, பூபால்ராயர்புரம், திரேஸ்புரம், மேட்டுப்பட்டி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் தேங்கி கிடந்தது.
நேற்று அதிகாலை வரை பெய்த மழையால் தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் மழை நீர் தேங்கி சேறாக மாறியதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். நகர பேருந்து பணிமனையிலும் மழைநீர் தேங்கியிருந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீட்டரில்): திருச்செந்தூர் - 80 காயல் பட்டினம்-40, குலசேகரப்பட்டினம்-104, விளாத்திகுளம்-4, வைப்பாறு-6, கோவில்பட்டி-1.5, கழுகுமலை-32, கயத்தாறு-12, கடம்பூர்-19, ஓட்டப்பிடாரம்-5, மணியாச்சி-5, வேடநத்தம்-5,கீழ அரசடி-25, எட்டயபுரம்-29, சாத்தான் குளம்-39, வைகுண்டம்-7, தூத்துக்குடி-38.