கரூர் கொசுவலை நிறுவன உரிமையாளர் வீட்டில் வருமான வரித் துறையினர் 2 நாட்களாக நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.32 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கரூர் ராம் நகரைச் சேர்ந்தவர் சிவசாமி. இவர் கரூர் வெண்ணெய் மலையில் ஷோபிகா இம்பெக்ஸ் என்ற பெயரில் கொசுவலை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிற்சாலைகள் ஆத்தூர் சிப்காட் மற்றும் கோவை சாலையில் தண்ணீர்ப் பந்தல் ஆகிய இடங்களில் உள்ளன. இங்கு ஆல்பா சைபர் மெத்லீன் என்ற ரசாயனப் பூச்சு கொண்ட ஏற்றுமதி ரக கொசுவலைகளை உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். ஆண்டுக்கு ரூ.500 கோடி வர்த்தகம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கொசுவலைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் வரிஏய்ப்பு செய்ததாக வந்த புகார்களின் அடிப்படையில், கரூர், திருச்சி, மதுரை, திருப்பூர், சென்னை ஆகிய இடங்களில் இருந்து வருமானவரித் துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்டோர், 10-க்கும் மேற்பட்ட கார்களில் சிவசாமியின் கரூர் வெண்ணெய்மலையில் உள்ள நிறுவனம், ராம் நகரில் உள்ள வீடு, சிப்காட், தண்ணீர்பந்தல் ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளில் நேற்று முன்தினம் மதியம் முதல் சோதனை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் இரவும் நீடித்த சோதனை, 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
இதில், ராம்நகரில் உள்ள சிவசாமியின் வீட்டில் துணிகள் அடுக்கி வைக்கும் அலமாரியில் ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் கட்டாக, கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, கணக்கில் வராத அந்தப் பணம் ரூ.32 கோடியை வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.