சைதாப்பேட்டையில் தமிழக அரசால் நடத்தப்படும் எம்.சி.ராஜா மாணவர் விடுதியின் நிலை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக ஆதி திராவிடர் நலத்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் தமிழகத்தில் 1,324 ஆதி திராவிடர் மாணவர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் 24 ஆதி திராவிடர் மாணவர் விடுதிகள் இயங்கி வருகின்றன. இதில் 3 விடுதிகள் வாடகை கட்டிடங்களிலும், 21 விடுதிகள் சொந்தக் கட்டிடங்களிலும் இயங்கி வருகின்றன.
இந்த விடுதிகளை முறையாக, சுகாதாரமான முறையில் பராமரிக்கக் கோரி, விழுப்புரம் மாவட்டம் வானூரைச் சேர்ந்த ஆனந்தராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவரது மனுவில் “சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா மாணவர் விடுதியில் தங்கி, சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தேன். தற்போது இந்த விடுதியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுவதும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. சைதாப்பேட்டை எம்.சி.ராஜா மாணவர் விடுதியின் தற்போதைய நிலை குறித்த புகைப்படங்களை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
இந்தப் புகைப்படங்களைப் பார்த்த நீதிபதிகள், ''சென்னையின் பிரதான சாலையான அண்ணாசாலை அருகில் அமைந்துள்ள இந்த விடுதியை, சாலையில் இருந்து பார்த்தாலே, அதன் மோசமான நிலை தெரியும் வகையில் இருக்கிறது. ஆனாலும் விடுதியைப் புதுப்பித்துப் பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என அதிருப்தி தெரிவித்தனர்.
விடுதியை நேரில் சென்று பார்வையிட்டு, புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யும்படி, ஆதி திராவிடர் நலத்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.