மூன்று சக்கர வாகனம் வழங்காமல் 2 ஆண்டுகளாக அலைக்கழிப்பதாக மாற்றுத்திறனாளி தம்பதியினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று புகார் தெரிவித்தனர்.
பேரூரணியை சேர்ந்தவர் ஜெகநாதன் (37). கண் பார்வையற்றவர். இவரது மனைவி மாரியம்மாள் (36). இவர் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது.
தனது மனைவி மாரியம்மாளை தூக்கிக் கொண்டு ஜெகநாதன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்.
அவர் கூறும்போது, ‘கண் பார்வையற்ற நான் ஊதுபத்தி, பினாயில் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறேன். உடல் ஊனமுற்ற எனது மனைவி தூத்துக்குடியில் உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் துணிகளை மடிக்கும் வேலை செய்து வருகிறார்.
எனது மனைவியால் நடக்க முடியாது என்பதால் அவரை நான் தூக்கியே சென்று வருகிறேன். தினமும் தூக்கி வந்து தான் பஸ்சில் ஏற்றி விடுகிறேன். இதனால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம்.
எனது மனைவிக்கு மூன்று சக்கர பைக் கேட்டு விண்ணப்பித்து 2 ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறோம். நேர்காணலில் கலந்து கொண்டால் தான் வழங்க முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால், நேர்காணல் எப்போது நடக்கிறது என எங்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு எனது மனைவிக்கு மூன்று சக்கர பைக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றார் அவர்.
பின்னர் இருவரும் மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமாரை சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தனர்.