சிவகங்கை
கூட்டுறவு சங்கங்களுக்குப் புத்துயிர் தந்தவர் ஜெயலலிதா என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
சிவகங்கையில் கூட்டுறவு வார விழா நடைபெற்றது. ஆட்சியர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். கதர் கிராமத் தொழில்கள் நல வாரிய அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:
கூட்டுறவு சங்கங்களுக்குப் புத்துயிர் தந்தவர் ஜெயலலிதா. ப.சிதம்பரம் மத்திய அமைச்சரவாக இருந்தபோது அவரது சொந்த மாவட்டமான சிவகங்கையில் மத்திய கூட்டுறவு வங்கி மூடப்பட்டது. அதை மீட்டெடுத்தவர் ஜெயலலிதா.
திமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களுக்கு 5 ஆண்டுகளில் ரூ.9,163 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் முதல்வர் பழனிசாமியோ ஒரே ஆண்டில் ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கி உள்ளார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருந்ததால் தான் அத்திவரதர் திருவிழாவும், பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பும் சிறப்பாக நடந்தன.
இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில் நாகராஜ் எம்எல்ஏ, முன்னாள் எம்.பி. செந்தில்நாதன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஆரோக்யசுகுமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குநர் பழனீஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.