வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:
“பருவமழை காலகட்டத்தில் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் சாதகப் போக்கின் காரணமாகவும் வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி, பாளையங்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 9 செ.மீ. மழையும், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், மணியாச்சியில் 7 செ.மீ. மழையும் கோத்தகிரியில் 6 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் பதிவாகும்”.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.