அடையாறு மற்றும் கூவம் ஆற்றில் நடைபெற்று வரும் மீட்டெடுக்கும் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை வருவாய் நிர்வாக ஆணையாளர் ராதாகிருஷ்ணன், இன்று செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அடையாறு, காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் ஏரியிலிருந்து வழிந்தோடி பயணித்து வரதராஜபுரம், திருநீர்மலை, அனகாபுத்தூர், நந்தம்பாக்கம், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளின் வழியாக 42 கி.மீ. பயணித்து வங்கக்கடலில் கலக்கிறது.
இதுதவிர நந்திவரம், கூடுவாஞ்சேரி, மணிமங்கலம், படப்பை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வழிந்தோடி அடையாறு ஆற்றில் கலக்கிறது. சென்னை மாநகரத்தில் உள்ள நான்கு மிகப்பெரிய மழைநீர் வடிகால்களில் அடையாறு ஒன்றாகும்.
அடையாறு ஆற்றினை மீட்டெடுக்கும் பணியின் (Adayar River Restoration) ஒரு பகுதியாக சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை (CRRT) நிதியின் கீழ் ரூ.94.76 கோடி செலவில் பொதுப்பணித்துறை மூலம் திருநீர்மலை பாலம் முதல் அடையாறு முகத்துவாரம் வரை 25 கி.மீ. நீளத்திற்கு அடையாறு ஆற்றினைத் தூர்வாருதல், சுமார் 11,400 ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ஆற்றினை அகலப்படுத்துதல், ஆற்றின் இருமருங்கிலும் வெள்ளத்தடுப்பு அமைத்தல், பாதிப்புக்குள்ளான பகுதிகளில் 1800 மீ நீளத்திற்கு கான்கிரீட் வெள்ளத்தடுப்புச் சுவர் அமைத்தல் மற்றும் 8 உள்வாங்கிகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருநீர்மலை பாலம் முதல் மறைமலை நகர் பாலம் வரையுள்ள அடையாறு ஆற்றினை மீட்டெடுக்கும் பணிகள் கடந்த 2019 ஜூன் மாதம் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மறைமலை நகர் பாலம் முதல் முகத்துவாரம் வரையுள்ள பகுதிகள் கடலோரப் பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதலுடன் 2019 அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
அடையாற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 800 மீ வரை வெள்ளத்தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் முடிவடைந்தன. மீதமுள்ள பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 5 உள்வாங்கிகள் கட்டப்பட்டு, மேலும், 3 உள்வாங்கிகள் கட்டப்படவுள்ளன. அடையாறு கரையோரங்களில் உள்ள 11,400 ஆக்கிரமிப்புகளில் இதுவரை 4,515 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
அதேபோன்று, கூவம் ஆறு திருவள்ளூர் மாவட்டம், சத்தரை கிராமத்தில் கூவம் ஏரியிலிருந்து உற்பத்தியாகி, கேசவரம் அணைக்கட்டு, அரண்வாயல், கொரட்டூர் அணைக்கட்டு, பருத்திப்பட்டு, நெற்குன்றம், கோயம்பேடு, அண்ணாநகர், அமைந்தகரை, சேத்துப்பட்டு, எழும்பூர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை வழியாகப் பயணித்து நேப்பியர் பாலம் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. கூவம் ஆற்றின் மொத்த நீளம் 72 கி.மீ. ஆகும்.
கூவம் ஆற்றினை சுற்றுச்சூழல் மீட்டெடுக்கும் பணியின் (Eco Restoration if Cooum River) ஒரு பகுதியாக சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை (CRRT) நிதியின் கீழ் ரூ.93.57 கோடி செலவில், பொதுப்பணித்துறையின் மூலம் பருத்திப்பட்டு பாலம் முதல் கூவம் முகத்துவாரம் வரை 27 கி.மீ. நீளமுள்ள கூவம் ஆற்றினைத் தூர்வாருதல், அகலப்படுத்துதல், பேபி கால்வாய் (Baby Canal) அமைத்தல், இருமருங்கிலும் கரைகள் அமைத்தல், ஆக்கிரமிப்புகளாக கண்டறியப்பட்ட 16,598 ஆக்கிரமிப்புகளில் இதுவரை 11,890 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை 80 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்தப் பணிகள் தொடர்பாக அவ்வப்போது தமிழக முதல்வர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் நேரடியாக கேட்டறிந்து வருகிறார் என அரசு வருவாய் நிர்வாக ஆணையாளர் ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது சென்னை மாநகராட்சி தெற்கு வட்டாரத் துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஷ், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அசோகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.